பெங்களூரு: தான்சானியா நாட்டைச் சேர்ந்த மாணவியை நிர்வாணமாக்கி பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 31-ம் தேதி இரவு, சாலையில் நடந்து சென்ற சபானா தாஜ் என்ற பெண் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அந்த காரை ஓட்டி வந்த நபர், சூடான் நாட்டை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்ற மாணவர் என தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், இஸ்மாயிலை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தான்சானியாவைச் சேர்ந்த இளநிலை வர்த்தக மேலாண்மை (பி.பி.எம்.) படித்து வரும் மாணவி உட்பட சிலர், விபத்து ஏற்பட்ட இடம் வழியாக காரில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல், காரை மடக்கி அவர்களை தாக்கியுள்ளது. இதில், காரில் இருந்த மாணவி ஒருவரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடி இருக்கின்றனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், மாணவியை கடுமையாக தாக்கியதோடு, நிர்வாணமாக்கி போலீசார் முன்னிலையிலேயே ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது. அப்போது, கிழிந்த ஆடையுடன் தன் மானத்தை காப்பாறிக்கொள்ள அந்த மாணவி, அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது, அவரைத் துரத்தி சென்ற அந்த கும்பல், அவரை கீழே இழுத்துப் போட்டு உதைத்துள்ளது.
அதேநேரத்தில், விபத்து ஏற்படுத்திய காரையும், தான்சானியா மாணவியின் காரையும் அந்த கும்பல் தீ வைத்துள்ளது. விபத்து ஏற்படுத்திய நபருக்கும், அந்த மாணவிக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பெங்களூரு காவல்துறை ஆணையர் மெகாரிக் கூறும்போது, ”மாணவியிடம் இருந்து புகார் பெறப்பட்டு உள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளோம். விரைவில் அவர்களை கைது செய்துவிடுவோம். இது போன்ற தாக்குதல்களை அனுமதிக்கவே முடியாது” என்றார்.
இதனிடையே, தான்சானியா அரசு இந்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் பயிலும் தான்சானிய மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தச் சம்பவம் மிகவும் வெட்ககேடானது. இதற்காக மிகவும் வேதனைப்படுகிறேன். கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாரமையாவைத் தொடர்பு கொண்டு, தான்சானிய மாணவியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளேன்” என்று கூறி உள்ளார்.