ஆப்பிள் நிறுவனம் சுமார் 60ஆயிரம் கோடி ரூபாய் வரியை அயர்லாந்து அரசிற்கு வழங்க வேண்டும் என ஐரோப்பிய கமிஷன் உத்தரவிட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கமிஷனின் நடவடிக்கையானது நியாயமற்றது என்றும், தனி நாடுகளின் வரிவிதிப்பு கொள்கைகளை உதாசீனப்படுத்துவதாக உள்ளது என்றும் அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கை வரி செலுத்தும் அமெரிக்கர்களை பாதிப்பதோடு, ஐரோப்பாவில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதையும் பாதிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்தில் நிறுவனங்களுக்கான வருமான வரி விதிப்பு 12.5 சதவீதமாக இருக்கையில், ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்திற்கு ஒரு சதவீதம் வரையிலான வரியே விதிக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய கமிஷன் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய கமிஷனின் முடிவு குறித்து ஆப்பிள் நிறுவனம், அயர்லாந்து அரசு ஆகியவை கவலை தெரிவித்துள்ளன.
இம்முடிவினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கமிஷனின் இந்த முடிவானது ஐரோப்பிய மண்ணில் தொடர்ந்து நிறுவனத்தின் முதலீடுகள் மற்றும் அதனால் ஏற்படுத்தப்படும் வேலை வாய்ப்புகளை பாதிக்கக்கூடும் என்றும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.
பதிவு செய்த நாள் : August 31, 2016 - 07:31 PM