#சோதனை_மூலம்_நிரூபிக்கப்பட்டுள்ளது.….
உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெரித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.
ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத்தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.
அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.
1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.
2) அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.
3) உணர்வு திரும்பியதும், முழுவதுமாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.
4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.
5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.
6) பரிசோதனையின்போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் E.E.G மற்றும் E.C.G பதிவு செய்யப்பட்டன. அதாவது E.E.G மூளையின் நிலையையும், E.C.G இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.
இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.
1) இஸ்லாமிய ஹலால் முறையில் விலங்குகள் அறுக்கப்பட்டபோது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.Gயில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும்போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.
2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை E.E.G. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.
3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் E.E.G பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.
4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத்துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.
மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்ட பிராணிகள் வேதனைக்கு உள்ளாகின்றன என்பதும் இந்தச் சோதனையில் தெரிய வந்தன.
1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலைகுலைந்து உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.
2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை E.E.G பதிவு காட்டியது.
3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம், ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும்போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.
மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.
எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது