2002 பிப்ரவரி 28 குஜராத் கொதிநிலையில் கொந்தளித்தது. ஆயிரக்கணக்கான சிறுபான்மை சமூக மக்கள் ஒரு ரத்த வெறி பிடித்த வன்முறை கும்பலால் கொடூரமாக வேட்டையாடப்பட்டனர். அரசின் ஆசீர் வாதத்தோடு காவல்துறையின் பாதுகாப்போடு ஆளும்கட்சியினரே அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர். சில சந்தர்ப்பங்களில் காவல்துறையினர் கூட வன்முறையினருக்கு ஆதரவாக அப்பாவிகளை தொலைத்து கட்டும் அந்த புனித (!) பணிக்கு தோள் கொடுத்த சம்பவங்களும் நடந்தன. சரித்திரம் சந்தித்திராத சதிகளின் கூடாரமாக அன்றைய குஜராத் விளங்கியது.
அன்றைய கொடூரங்களின் சாட்சியாக கொடூரர் களின் கோர தாண்டவம் அமைந்தது. அது தொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படங்கள் உலகத்தை உலுக்கியது.. அமைதி நாடும் ஒவ்வொருவரையும் அலற வைப்பதாக இருந்தது.
போதும் கோர தாண்டவம். வேண்டாம் ரத்த பலிகள் எங்களை விட்டு விடுங்கள் என அந்த மனித மிருகங்களை நோக்கி ஒரு மனிதன் கை கூப்பி கெஞ்சும் புகைப்படம் ஆயிரம் விளக்கம் சொன்னது. அந்த கால கட்ட த்தின் இனப்படுகொலையின் வெறித்தனத்தை வெளிச்சம் போட்டு காட்ட அந்த புகைப்படம் ஒன்றே போதும்.
கை கூப்பி கண்ணீர் விட்டு அழும் அந்த புகைப்படம் குதுபுதீன் அன்சாரி எனும் ஏழை தையல் தொழிலாளியின் புகைப்பட மாகும். அந்த புகைப்படம் பாதிப்புகளை படம் பிடித்து காட்டுவது என்றால் கலவரக்காரர்களின் இரக்கமற்ற செயலை வெளிச்சப்படுத்தும் மற்றொரு புகைப்படம் அசோக் பார்மர் என்ற சங் பரிவார் இளைஞன் காவி உடையுடன் கையில் இரும்புத்தடியுடன் கொலை வெறியுடன் உச்ச கட்ட ரத்த தாகத்துடன் போஸ் கொடுக்கும் புகைப்படமாகும். இந்த புகைப்படம் புகழ் பெற்ற புகைப்பட கலைஞர் செபாஸ்டியன் டிசோசா எடுத்த புகைப்படமாகும்.
உதவி கேட்டு அரற்றி ய குத்புதீன் அன்சாரி யையும் கொலை வெறி கொண்டு திரிந்த, மத பயங்கரவாத சிந்தையுடன் அலைந்த அசோக் பார்மரை யும் ஒரே மேடையில் ஏற்றி அற்புதம் படைத்த நிகழ்வு 2014 ம் ஆண்டு நடந்தது. மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பி ஜெயராஜன் ( தற்போதைய கேரள அமைச்சர் ) ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பகிரங்க மன்னிப்பு கேட்டார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட குதுபுதீன் அன்சாரியிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அன்சாரிக்கு பூங்கொத்து கொடுத்து உரையாடியது நெகிழ்ச்சியான காட்சியாக இருந்தது. மனம் திருந்திய மைந்தனாக அசோக் பார்மர் மாறியது மிகுந்த அதிர்வை ஏற்படுத்திய நிலையில் இந்த நிகழ்வு மத வாத பாசிச சக்திகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அசோக் பார்மர் பாசிச சக்திகளுக்கு எதிராக நேரடியாக களம் புகுந்தார். நாட்டுப்பற்றையும் மனித நேயப்பண்பையும் தொலைத்து மாட்டு ப்பற்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த சக்திகளால் தலித் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். தலித் மக்கள் மீதான தாக்குதலைக்கண்டு குஜராத் வெகுண்டது. மாபெரும் பேரணி நடந்தது. பெரும் மக்கள் திரள் குவிந்த தலித் மக்களின் அறப் போராட்டத்திற்கு முஸ்லீம் சமூக ம் பேராதரவை வழங்கியது. பெருவாரியான முஸ்லீம் இளைஞர்களும் பங்கேற்றனர்.
அசோக் பார்மர் தலித் மக்களின் பிரமாண்ட பேரணியான அஸ்மிதா யாத்திரையில் சவரகுண்டலா பகுதியில் இருந்து ஆகஸ்ட் 11ம் தேதி பங்கு கொண்டார். 2002ல் மத வெறி கூட்டத்தின் போர்ப்படை தளபதியாக இருந்த அசோக் பார்மர் தலித் முஸ்லீம் ஒற்றுமைக்காக தனது வாழ் நாள் முழுவதும் பாடுபடப் போவதாக சூளுரைத்துள்ளார்.
source: Kaalaimalar
http://kaalaimalar.net/ashok-mochi-gujarat-riots-posterboy-advocates-for-dalit-rights/