குழந்தைகள் கடத்தலை தடுப்பதற்கு மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்டம் தோறும் ஆய்வாளர் தலைமையில் தனிப்பிரிவு அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டால் பணி சுமை அதிகரிக்கும் என்றும், அதனால் மாவட்ட தோறும் டி.எஸ்.பி. தலைமையில் தனி பிரிவு அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தினர்.
மேலும் காணாமல் போன குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். குழந்தை கடத்தல் விவகாரத்தில், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 27 பேரின் தகவலை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் அளித்து இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதற்கு விசாரணை நடந்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தும், வழக்கை மதுரை கிளைக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டனர்.
பதிவு செய்த நாள் : August 31, 2016 - 05:09 PM
Source: New gen media