தமிழாக்கம்!
சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கில் தொடர்புடைய குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி ராஜ்குமார் பாண்டியனை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அவ்வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. சிறப்பு நீதிபதி எம்.பி.கோசாவி, ஐ.பி.எஸ் அதிகாரி பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க உரிய முன் அனுமதி பெறப்படவில்லை என்று கூறி அவரை விடுவித்துள்ளார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கபடும் பன்னிரெண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2007ல் சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் அவர் மனைவி கௌசர் பீ ஆகியோரை ஹைதராபாதில் இருந்து ராஜ்குமார் தலைமையிலான படை தான் கொண்டு வந்தனர் என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இவர்கள் இருவரும் நவம்பர் 2007ல் கொலை செய்யப்பட்டனர்.
சொஹ்ராபுதீன் வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு 2007 ஆம் ஆண்டு முதல் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட இவர் 2014 ஆம் ஆண்டு பிணையில் வெளி வந்த பிறகு மும்பையில் உள்ள குஜராத் தொழிற்சாலை முன்னேற்ற நிறுவனத்தின் தொடர்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.
சொஹ்ராபுதீன் ஷேக் வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் இதுவரை பா.ஜ.க தலைவர் அமித் ஷா, ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் விமல் பட்னி, முன்னாள் குஜராத் காவல்துறை தலைவர் பி.சி. பாண்டே, குஜராத் காவல்துறை கூடுதல் டைரக்டர் ஜெனரல் கீதா ஜோஹ்ரி, ஓ.பி.மாத்தூர், ஆந்திரா ஐ.பி.எஸ். அதிகாரி என். பாலசுப்ரமணியம், குஜராத் காவல்துறை அதிகாரி அபே சுதாசமா, என்.கே..அமின், குஜராத் கூட்டுறவு வங்கியின் மூத்த அலுவலர்கள் யஷ்பால் சுதாசமா, மற்றும் அஜய் படேல் ஆகியோர் இவ்வழக்கில் இருந்து இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எஸ். அதிகாரி நரேந்திர அமின் ஆகஸ்ட் 19 அன்று போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டார்.
வழக்கில் கைது செய்யப்பட்ட குஜராத் முன்னாள் டி.ஐ.ஜி. வன்சாரா தற்போது பிணையில் வெளியே உள்ளார்.
இந்த இரு என்கெளண்டர்களின் சாட்சியான துளசிராம் பிரஜாபதி என்பவரும் அடுத்த வருடம் குஜராதின் பனாச்கந்தா மாவட்டத்தில் நடத்தப்பட்ட என்கெளண்டரில் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கு, நியாயமான விசாரணை வேண்டி சி.பி.ஐ யின் வேண்டுகோளின் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது. உச்ச நீதி மன்றம் பின்னர் இரு வழக்குகளையும் இணைத்து விசாரித்தது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தததில் இருந்து விசாரணை அமைப்புகளான சி.பி.ஐ. மற்றும் என்.ஐ.ஏ. ஆகியவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு என்கௌண்டர் வழக்குகளில் இருந்து பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. மேல் முறையீடு ஏதும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source: kaalaimalar /time Now