இந்துத்துவா கொள்கை குறித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு, காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். ‘இந்திய நாடு, இந்துத்துவா பாதையில் செல்ல வேண்டும்’ என்று ஆதித்யநாத் விருப்பம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் சஞ்சய் நிருபம், பிரமோத் திவாரி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க, யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் பொறுப்பேற்ற முதல் நாள் தொடங்கி, பல அதிரடி அறிவிப்புகளை ஆதித்யநாத் வெளியிட்டுவருகிறார்.
இறைச்சிக்கூடங்களுக்குத் தடை, ஆன்டி-ரோமியோ படை என ஆதித்யநாத்தின் உத்தரவுகள் பலத்த விவாதங்களைக் கிளப்பியது.
இந்த நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘மக்களின் வாழ்க்கையை உயர்த்துமானால், இந்த நாடு இந்துத்துவா பாதையை ஏற்பதற்குத் தயக்கம் காட்டக்கூடாது’ என அவர் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.
இதையடுத்து, ஆதித்யநாத்தின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸின் மூத்த தலைவர் சஞ்சை நிருபம்,’ வறுமை, வேலையின்மை போன்ற பிரச்னைகள் இந்துத்துவா கொள்கைகளால் தீர்ந்துவிடாது. ஆதித்யநாத் இதுபோன்ற பேச்சுக்களை விட்டுவிட்டு, அனைத்து மக்களின் நலன் சார்ந்து செயல்பட வேண்டும்’ எனக் கூறியுள்ளார். மேலும், இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என காங்கிரஸ் கட்சியின் பிரமோத் திவாரி, ஆதித்யநாத் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.