புதன், 19 ஜூலை, 2017

அரசியலில் குதிக்கிறாரா கமல் !? July 18, 2017

தமிழக அமைச்சர்களுக்கும், நடிகர் கமலுக்கும் கடந்த சில தினங்களாக வார்த்தைப் போர் நடந்துவரும் சூழலில், தனது ட்விட்டர் பக்கத்தில் சில அதிரடி கருத்துகளை வெளியிட்டுள்ளார் கமல்.

தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் நடிகர் கமல் பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்தார். இதையடுத்து கமலை அமைச்சர் பலரும் காட்டமாக விமர்சிக்கத்தொடங்கினர். ஜெயலலிதா இருந்த போது வாய் திறக்காத கமல் இப்போது வாய் திறக்கிறார் என்று அமைச்சர்கள் கூறினர். இதையடுத்து ஒவ்வொரு அமைச்சர்களின் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் தனது ட்விட்டர் பக்கத்தில், நேரடியாகவும் மறைமுகமாகவும் நடிகர் கமல் பதிலளித்து வந்தார்.
 
....ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது..

இந்நிலையில், மீண்டும் பல அதிரடி கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல் பதிவு செய்துள்ளார். அதில், அமைதியுறாமல் கூச்சலிடுபவர்களுக்கும், அமைதியாக இருக்கும் என் தோழர்களுக்கும் விரைவில் ஒரு அறிவிப்பு வரும். நேற்று முளைத்த காளான்கள் போன்றே என் மீதான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் விரைவில் உண்மை என்ற வெயிலில் காய்ந்து போகும். இது போன்ற குற்றச்சாட்டுகளை அமைதிப்படுத்தும் வகையில் அந்த அறிவிப்பு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்

 
புரியாதோர்க்கு ஆங்கில பத்திரிக்கைகளில் நாளை வரும் சேதி

இதையடுத்து, தன்னுடைய அடுத்த பதிவு ஒன்றில், தோற்றிருந்தால் நான் போராளி, முடிவெடுத்தால் நான் முதல்வர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது கமலின் அரசியல் பிரவேசத்திற்கான சமிக்ஞையாகவே தெரிகிறது. இதையடுத்து, ‘மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்’ எனவும் கமல் குறிப்பிட்டுள்ளார். இதில் முனைவர் என்று திமுக தலைவர் கருணாநிதியை குறிப்பிடுகிறாரோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இருப்பினும் கமல் என்ன சொல்ல வருகிறார் என்ற குழப்பமான மனநிலையிலேயே பொதுமக்கள் உள்ளதால் நாளைய விடியலில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது . எது எப்படியிருப்பினும் நடிகர் கமல், தன்னுடைய அரசியல் பிரவேசத்திற்கான சமிக்ஞையாகவே இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார் என்பது மட்டும் வெளிச்சம்.

Related Posts: