தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர பல முக்கிய முடிவுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது தமிழக அரசு. இரண்டாம் அலையில் பொதுவாக காணப்படும் நோய் அறிகுறியாக மூச்சுத்திணறல் உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நாளுக்கு நாள் மக்கள் மடிகின்ற நேரத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தியை மேம்படுத்த இந்திய அரசு பல திட்டங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று முதல்வர் 11ம் தேதி அன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதன் பயனாக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சில முக்கிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸிஜன் மற்றும் அது தொடர்பான மருத்துவ கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மானியமாக 30% மூலதனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தவணை முறையில் வழங்கப்படும். இந்த சலுகையைப் பெற ஆக்ஸ்ட் 15ம் தேதிக்குள் அந்நிறுவனங்கள் உற்பத்தியை துவங்க வேண்டும்.
நாள் ஒன்றுக்கு 10 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய அமைக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு (ஜனவரி 1 முதல் நவம்பர் 30க்குள் செயல்பாட்டிற்கு வரும் ) 30% மானியம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழங்கப்படும். இந்நிறுவனங்களுக்கும் வருகின்ற நவம்பர் 30ம் தேதிக்கு முன்பே உற்பத்தியை துவங்கியிருக்க வேண்டும்.
சிப்காட் மற்றும் சிட்கோ நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 6% வட்டி மானியத்துடன் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் உடனடியாக கடன் வழங்கும் என்றும் கூறியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/second-wave-tamil-nadu-government-announced-subsidies-to-medical-oxygen-industries-303042/