திங்கள், 24 மே, 2021

கடும் போட்டிக்கு இடையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வப் பெருந்தகை நியமனம்

 23/5/2021 காங்கிரஸ் கட்சியில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவிய நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கு.செல்வப் பெருந்தகை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக நியமனம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சியில் வழக்கம் போல, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விஜயதாரணி, செல்வப் பெருந்தகை, ராஜேஷ் குமார் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் மல்லிகார்ஜுண கார்கே, புதுச்சேரி எம்.பி வைத்திலிங்கம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடநெத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரச் கட்சி தலைவர் பதவிக்கு தேர்வு செய்ய விருபுகிறவர்களின் பெயர்களை எழுதி ஒரு கவரில் மூடித் தருமாறு கேட்கப்பட்டது. அதன்படி, டசட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ கு.செல்வப் பெருந்தகை நியமனம் செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணை தலைவராக ராஜேஷ் குமாரை நியமனம் செய்து அறிவித்துள்ளார்.

கு.செல்வப் பெருந்தகை 2006-2011 சட்டப் பேரவையில் விசிக சார்பில் எம்.எல்.ஏ-வாக இருந்தார். பின்னர், அக்கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதனைத் தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/selva-perunthagai-becomes-tamil-nadu-assembly-congress-leader-306282/