வெள்ளி, 28 மே, 2021

தமிழகத்தில் வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை: இதுவரை 5 பேர் பலி?

 28.05.2021 Black fungus in Tamil Nadu Tamil News: இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா 2ம் அலை ஏற்கனவே தமிழகத்தில் தாக்கத்தை ஏற்பத்தியுள்ள நிலையில், மாநிலத்தில் இன்னொரு தொற்றுநோயின் பரவல் வேகமெடுத்துள்ளது. கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் மியூகோமிகோசிஸ் என்ற இந்த தொற்றுக்கு தமிழகம் முழுவதும் இதுவரை ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த கருப்பு பூஞ்சை தொற்றுக்கு வேலுரைச் சேர்ந்த கே முருகானந்தம் (42 வயது) என்பவர் முதலில் உயிரிழந்துள்ளார். பிரபல கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் முருகானந்தம், வேலூரில் உள்ள ஷென்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கண்களில் எரிச்சல் ஏற்படவே மே 17 அன்று வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சி.எம்.சி) அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்குப் பிறகு கொரோனாவுக்கு சோதனை செய்து கொண்டதாகவும், சோதனையில் கொரோனா பாசிட்டிவ் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 10 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் கடந்த புதன் கிழமை உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், கருப்பு பூஞ்சை தொற்று குறித்து மருத்துவமனையில் இருந்து இன்னும் உறுதிப்படுத்தல் அறிக்கை கிடைக்கவில்லை என்றும், சி.எம்.சி -யில் மேலும் 75 நோயாளிகள் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் வேலூர் நகர சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கடலூரைச் சேர்ந்த மூன்று கோவிட் நோயாளிகள், கறுப்பு பூஞ்சை காரணமாக அரசு மருத்துவமனைகளில் இறந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களுள் சேதியதொப்புவைச் சேர்ந்த கண்ணன் (54), தட்டஞ்சாவடியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (54), வேப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா பாசிட்டிவ் சோதனைக்கு பின்னர் கண்ணன் மே 8 ஆம் தேதி கடலூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று அறிகுறிகளைக் காட்டியதும், அவரது உடல்நிலை மோசமடைந்ததுள்ளது. எனவே அவர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருப்பு பூஞ்சைக்கு மேலும் உயிரிழந்த ராஜேஸ்வரியும் கொரோனா பாசிட்டிவ் என தெரிந்ததும் மே 10 அன்று கடலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெயதகோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த இ.சின்னராஜ் (37) இந்த வார தொடக்கத்தில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/black-fungus-in-tamil-nadu-tamil-news-tamil-nadu-registers-5-deaths-for-black-fungus-307897/