வெள்ளி, 28 மே, 2021

சென்னையில் குறைந்து வரும் கொரோனா தொற்று; காலியாகும் அவசர சிகிச்சை படுக்கைகள்

 28.05.2021 கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் போது முதல் முறையாக, கடந்த இரண்டு நாட்களாக, சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா சிகிச்சைக்காக படுக்கைகளை கண்டறிவதில் மிகவும் சிரமத்திற்கு ஆளான சென்னை தற்போது கொஞ்சம் ஆசுவாசம் அடைந்துள்ளது.

மே 11ம் தேதி அன்று 180 ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் ஆதரவோடு இயங்கும் படுக்கைகள் மட்டுமே மாநகரில் இருந்தது. ஆனால் தற்போது வியாழக்கிழமை அன்று 1496 படுக்கைகள் காலியாக உள்ளது. இந்த வாரத்தின் ஆரம்பத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகளின் தேவை மிகவும் அதிகமாக இருந்தது. 8,866 என்ற அளவில் இருந்து தற்போது 400 வரை குறைந்துள்ளது. இதன் விளைவாக, மற்றும் திறன் அதிகரித்தவுடன், காலியாக உள்ள ஆக்ஸிஜன் ஆதரவு படுக்கைகளின் எண்ணிக்கை இந்த வார தொடக்கத்தில் 800-லிருந்து வியாழக்கிழமை 1,417 ஆக உயர்ந்தது.

ஆக்ஸிஜன் தேவையற்ற நோயாளிகள் உட்பட மருத்துவமனைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை மே இரண்டாவது வாரத்தில் சுமார் 14,000 ஆக இருந்தது. வியாழக்கிழமை அந்த எண்ணிக்கை 13,307 ஆக குறைந்துள்ளது. சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நபர்களில் அண்டை மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகளும் அடங்குவார்கள். நோய் தொற்று குறைவே நோயாளிகளின் எண்ணிக்கை குறைவுக்கு காரணமாக இருக்கிறது.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் நகரில் ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. மே மாத முதல் வாரத்தில் 7500 படுக்கைகள் இருந்த நிலையில் தற்போது 60% படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மொத்தமாக 12,136 படுக்கைகள் தற்போது சென்னையில் உள்ளது.

புதிய வழக்குகள் மற்றும் தொற்று எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொள்ளும் போது, இரண்டாம் அலையின் அபாயத்தில் இருந்து சென்னை மீள்கிறது என்பதை அறிய முடிகிறது. ஞாயிற்றுக்கிழமை சென்னையில் 5169 வழக்குகள் பதிவான நிலையில் வியாழக்கிழமை அன்று அந்த எண்ணிக்கை 2779 ஆக குறைந்துள்ளது.

சோதனைகளில் மாற்றம் இல்லை

நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. நம்பிக்கையான சூழல் உருவாகியுள்ள போதிலும், பாதுகாப்பினை குறைக்க நிர்வாகம் முன்வரவில்லை. தடம் அறிதல் மற்றும் சிகிச்சையின் மூலோபாயத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவோம் என்று சுகாதாரத்துறை துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennais-hospital-occupancy-drops-noticeably-over-two-days-307888/