27.05.2021 Kerala doctors cross river trek several kilometres to reach tribal village : கொரோனா தொற்று இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் தான் உறுதி செய்யப்பட்டது. பல்வேறு தொற்றுகளை இதற்கு முன்பே சந்தித்திருந்த காரணத்தால் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மிக சீரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டது கேரள அரசு. கொரோனா இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக இருக்கலாம் என்பதை முன்கூட்டியே கணித்த கேரள அரசு கடந்த ஆண்டில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தியது.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில் கீழும் கட்டாயமாக ஆரம்ப சுகாதார மையம் உருவாக்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. டி.சி.சியின் தீவிர செயல்பாடுகள் காரணமாக சுகாதாரத்துறையின் மீதான அழுத்தம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே அறிகுறிகள் கண்டறியப்பட்டு உடனே அவர்களுக்கு தேவையான சிகிச்சையும் வழங்கப்பட்டது.
தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் அட்டப்பாடி மலைப் பிரதேசத்தில் மூன்று ஆரம்ப சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது. புதூர், அகழி மற்றும் சோலையூர் கிராமப் பஞ்சாயத்தில் மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் முருகுளா பழங்குடி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்களுக்கு கடுமையான காய்ச்சல் இருப்பதாக தகவல்கள் அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவர் சுகன்யா, சுகாதார கண்காணிப்பாளர் சுனில் வாசு மற்றும் புதூர் ஆரம்ப சுகாதார நிலைய இளநிலை சுகாதார கண்காணிப்பாளர் ஷைஜ் ஆகியோர் முருகுளா கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தனர்.
அட்டப்பாடியில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பழங்குடியினர் கிராமம். இருளர், முடுகர் மற்றும் குறும்பர்கள் வாழும் இந்த பகுதியில் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்வது அவ்வளவு எளிதானது அல்ல. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வாகனத்தில் பயணிக்க சாலைகள் இருந்தாலும் பவானிப்புழா ஆற்றை கடந்து தான் முருகுளாவிற்கு செல்ல முடியும். ஆற்றில் தண்ணீர் அளவு குறைவாக இருந்தால் ஜீப்பில் செல்ல முடியும். இல்லை என்றால் நடந்து தான் செல்ல வேண்டும். அப்படியாக நிலை இருக்க மூன்று மருத்துவர்களும், வாகன ஓட்டுநர் சாஜேஷூம் பவானிப்புழா ஆற்றைக் கடந்து 4 கி.மீ மலையேற்றத்திற்கு பிறகு முருகுளா கிராமத்தை அடைந்தனர்.
அங்கு நோய் தொற்று அறிகுறிகளுடன் இருக்கும் 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவக் குழு ஆண்டிஜென் சோதனைகளை நடத்தியது. அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் அவர்கள் புதூர் டி.சி.சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மருத்துவக் குழுவின் துணிகர செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வந்த நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மருத்துவக்குழுவை அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
“புதூர் கிராம பஞ்சாயத்தின் கீழ் 67 பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களின் கிராமங்கள் உள்ளன. இவர்களில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போனால், மருத்துவமனைக்கு உடனே அழைத்து செல்வதில் அமைவிட பிரச்சனைகள் நிறைய உள்ளது. ஆனால் டி.சி.சியின் வருகை மற்றும் அதன் செயல்பாடுகள் இப்பகுதியில் எவ்வகையான சவால்கள் வந்தாலும் சமாளிக்கும் தைரியத்தை வழங்கியுள்ளது. தற்போது 120 படுக்கைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது புதூர் டி.சி.சி.. வீட்டில் தனியறை இல்லாமல் இருக்கும் கோவிட் தொற்று நோய் ஏற்பட்டவர்கள் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவர்களின் வருகையும் அவர்களின் அர்பணிப்பும் பாராட்டுதலுக்குரியது” என்று பாலக்காடு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜன் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிடம் கூறினார்.
இந்த மருத்துவக் கட்டமைப்பு மக்களுக்கு எவ்வளவோ நன்மை அளித்துள்ளது என்று தான் கூற வேண்டும். முன்பு போல் இல்லாமல் தற்போது மக்கள் தாமகவே முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். தடுப்பூசிகளை போட்டுக் கொள்கின்றனர். இதற்கு டி.சி.சியின் விழிப்புணர்வு செயல்பாடுகளும் நடவடிக்கைகளும் மிக முக்கியமான ஒன்றாகும். முருகுளா மக்களுக்காக அந்த மருத்துவர்கள் எடுத்துக் கொண்ட தீவிர அக்கறை எங்களுக்கு அரசின் செயல்பாடுகள் மீதும் அரசு மருத்துவர்கள் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று அட்டப்பாடியில் பழங்குடியின செயற்பாட்டாளராக இருக்கும் ஒடியன் லக்ஷமணசாமி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/on-covid-sos-call-kerala-doctors-cross-river-trek-several-kilometres-to-reach-tribal-village-307133/