27.05.2021 தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ல் நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக, வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டார்.
இதில், இப்போது மீன்வளத்துறை அமைச்சராகவும், திமுகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள திமுகவின் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 13 தலைவர்கள் மீது தொடரப்பட்ட 38 வழக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளதாக இங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்குகள் வாபஸ் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு மே 21ம் தேதி, “சிபிஐ உள்ளிட்ட சில வழக்குகளைத் தவிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு எதிரான மற்ற அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்றும் இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு வேலைகளுக்கு செல்ல ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழ்களை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்தது. மேலும், இந்த போராட்டம் தொடர்பாக மே 22, 2018 அன்று பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தவிர்த்து மற்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை தொடர்பாக விசாரணை நடத்திய ஒரு நபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன் அளித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 94 பேருக்கு நிவாரணம் வழங்குமாறு விசாரணைக் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ரூ.1 லட்சமும், துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையா சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி அந்த ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மே 22, 2018 அன்று மிகப்பெரிய அளவில் நடைபெற்ற போராட்டம் வன்முறைக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
source : https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-orders-withdrawal-of-cases-against-party-leaders-over-anti-sterlite-protests-307690/