வெள்ளி, 28 மே, 2021

வேட்பாளர்களுக்கு ரூ.13 கோடி கொடுத்ததா பாஜக? எஸ்.வி.சேகர் புதிய சர்ச்சை

 27.05.2021சர்ச்சைகளுக்கு பெயர் போன, பாஜக ஆதரவாளர் எஸ்.வி.சேகர் மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த முறை அவர் பேசியது திராவிடக் கட்சிகளைப் பற்றியோ அல்லது திராவிட கட்சிகளின் தலைவர்களைப் பற்றியோ அல்ல, பாஜக தொடர்ப்பாக பேசியுள்ளார்.

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்தும் ட்விட்டர் சமீபத்தில் ஸ்பேஸர் என்று பயன்பாட்டு தளத்தை அறிமுகப்படுத்தியது. ட்விட்டர் ஸ்பேசஸ் என்பது ஆடியோ மூலம் ஒரு குழுவாக பேசி விவாதிக்கலாம். இந்த ட்விட்டர் ஸ்பேஸஸ்ஸில் பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கூட்டம் நடந்துள்ளது. இதில் கலந்துகொண்ட பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு பாஜக தலைமை ரூ.13 கோடி கொடுத்ததாக கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவியது தொடர்பாக ட்விட்டர் ஸ்பேசஸ் வசதியில் பாஜக நிர்வாகிகள் பாஜக ஆதரவாளர்கள் கலந்துகொண்ட ஒரு விவாதம் நடந்துள்ளது. இந்த உரையாடலில் பங்கேற்று பேசிய, நடிகர் எஸ்.வி.சேகர், “நாம ஒரு க்ளோஸ் சர்கிள்தான் (நெருங்கிய வட்டம்தான்) பேசுறோம். ஒவ்வொரு வேட்பாளருக்கும், நான் கேள்விப்பட்டது 13 கோடி ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கிறார்கள். இப்போ தோற்றுப் போனவர்களும் ஜெயிச்சவங்களும் அதற்கு கணக்கு கொடுக்கிறார்களா? கொடுக்கனும் இல்லையா?” என்று பேசியுள்ளார்.

நடிகர் எஸ்.வி.சேகர், ட்விட்டர் ஸ்பேஸஸில் நடந்த விவாதத்தில், பாஜக வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் கட்சி 13 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக தான் கேள்விப்பட்டதாகவும் அதற்கு அவர்கள் முறையாக கணக்கு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் மோடியின் படத்தைப் பயன்படுத்தாமல், ஜெயலலிதாவின் படத்தைப் பயன்படுத்தினார்கள். தான் வேட்பாளராக இருந்திருந்தால் அப்படி ஒரு வெற்றியே வேண்டாம் என்று மோடியின் படத்தைப் பயன்படுத்தியிருபேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் வரையறைப்படி, சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை செலவும் செய்யலாம். அதற்கு மேல் செலவு செய்தால், தேர்தல் விதி மீறல் ஆகும். ஆனால், பாஜக வேட்பாளர்களுக்கு கட்சி 13 கோடி ரூபாய் கொடுத்ததாக தான் கேள்விப்பட்டதாக எஸ்.வி.சேகர் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் எஸ்.வி.சேகர் பேசியிருப்பது குறித்து எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றன. இது குறித்து ஊடகங்களில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன், “ஒரு வேட்பாளருக்கு 13 கோடி ரூபாய் என்றால், தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 260 கோடி கருப்பு பணத்தை செலவிட்டுள்ளதா? 5 மாநில தேர்தலில் பாஜக போட்டியிட்ட இடங்களைக் கணக்கில் கொண்டால் எத்தனை நூறு கோடிகள் செலவிடப்பட்டது” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், எஸ்.வி. சேகரின் பேச்சு குறித்து இதுவரை பாஜக தரப்பில் இருந்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.

பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் இதற்கு முன்பு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்கு வழக்கு தொடர்ந்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் அவரைக் கண்டித்தது. மேலும், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/s-ve-shekher-controversy-speech-in-twitter-spaces-as-he-heard-bjp-give-rs-13-crore-for-every-candidate-307815/