தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வு நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வருவதால் தற்போது தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் உயர்கல்வியில் சேர 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் தேவை என்பதால், 12 ஆம் வகுப்புக்கு நிச்சயம் பொதுத் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மே மாதத்தில் நடத்த இருந்த பொதுத் தேர்வுகள் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கொரோனா பரவல் குறைந்தவுடன் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும், தேர்வு ரத்து செய்யப்படவில்லை எனவும், தேர்வு நிச்சயம் நடைபெறும் எனவும் அவர் தெளிவுப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் அலகுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அலகுத் தேர்வு வழிகாட்டுதல்கள்:
வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே குழு ஏற்படுத்த வேண்டும்.
அந்த குழுவில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தவிர வேறு எந்த தகவலும் பதிவிடவோ, பரிமாறவோ கூடாது. அந்த குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் விடைத்தாளில் தங்களது பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் முதலியவை கட்டாயம் இடம்பெற செய்ய வேண்டும்.
மாணவர்கள் விடைகளை எழுதி, பெற்றோர் கையொப்பம் பெற்று, அதனை PDF வடிவில் அனுப்ப வேண்டும்
ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.
ஒருவேளை, பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அலகுத்தேர்வு மதிப்பெண்களை கொண்டு தேர்வு முடிவுகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் பொதுத்தேர்வு நடத்துவது சந்தேகம் என்பதால் தேர்வுத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-govt-exams-board-release-guidelines-whatsapp-unit-test-to-12th-std-305036/