25.5.2021 முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணநிதியைப் போல, மு.க.ஸ்டாலின் தனது மருமகன் சபரீசனை டெல்லிக்கு பொறுப்பாளராக நியமிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி தலைமையிலான திமுக, வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகித்தது. அப்போது, கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் வாஜ்பாய் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தார். முரசொலி மாறன், டெல்லி அரசியல் வட்டாரத்தில் கருணாநிதியின் வலதுகரமாக செயல்பட்டார்.
திமுகவின் மாநில உரிமைகள் உள்ளிட்ட விஷயங்களை தேசிய அரசியலில் கருணாநிதியின் குரலாக ஒலித்தவர். கருணாநிதி மாநில அரசியலை கவனித்துக்கொள்ள மகன் மு.க.ஸ்டாலினையும் டெல்லியில் தேசிய அரசியலை கவனித்துக்கொள்ள மருமகன் முரசொலி மாறனையும் நம்பியிருந்தார்.
முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, திமுகவில் இருந்து டெல்லி அரசியலை கவனித்து ஆளுமைகள் அவ்வப்போது மாறி வந்துள்ளனர். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா, கனிமொழி என்று மாறி வந்துள்ளனர்.
இந்த சூழலில்தான், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில் திமுக மட்டுமே 133 இடங்களில் வெற்றி பெற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து அதிரடியான அரசு நிர்வாகத்திலும் ஆட்சியிலும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவருடைய நடவடிக்கைகளை நிர்வாக வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் வரவேற்று வருகின்றனர்.
இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் பங்களிப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறையினர் சபரீசன் வீட்டில் சோதனை நடத்தினர். திமுகவுக்காக தேர்தல் தேர்தல் பிரசார உத்திகளை வகுக்க தேர்தல் உத்தி நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்ததில் சபரீசனின் பங்கு முக்கியமானது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதே போல, வாக்குப்பதிவு அன்று மு.க.ஸ்டாலினும் சபரீசனும் பிரசாந்த் கிஷோரைவும் அவரது குழுவினரையும் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ஸ்டாலின்தான் தராரு, விடியல் தரப் போறாரு, விடியலை நோக்கி போன்ற கோஷங்கள் பரவலாக்கியதில் சபரீசனுக்கு பெரிய பங்கு உண்டு. அதே போல, 9 மாவட்டங்களுக்கான கிராம உள்ளாட்சி தேர்தலும் தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி தேர்தலும் நடத்தப்படாமல் உள்ளது. இந்த தேர்தலிலிலும் சபரீசனின் பங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் அதிமுக ஒன்றும் மோசமாக தோற்றுவிடவில்லை. ஆனால், அதிமுகவின் ராஜ்ய சபா உறுப்பினர்களாக இருந்த கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, தங்கள் ராஜ்யசபா எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதற்கு முன்னதாக, மார்ச் மாதம் அதிமுக ராஜ்ய சபா எம்.பி முகமது ஜான் காலமானார். இதனால், அதிமுக 3 ராஜ்ய சபா பதவிகளை இழந்தது. தமிழ்நாடு சார்பில் 3 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாக உள்ளது.
இந்த 3 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கும் தற்போது தேர்தல் நடத்தினால், இந்த 3 எம்.பி பதவிகளும் திமுகவுக்கே கிடைக்க வாய்ப்ள்ளது. அதனால், திமுகவில் ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது. இந்த 3 பதவிகளுக்கு இப்போதே திமுகவில் நீயா நானா என்ற போட்டி நிலவுகிறது. ஆனாலும், இவர்கள் தான் ராஜ்ய சபாவுக்கு டெல்லி செல்லக்கூடிய 3 பேர் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு மிகவும் குறைவான வாக்குகளில் தோல்வியடைந்த தங்க தமிழ்ச்செல்வனும் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த கார்த்திகேய சிவசேனாபதியும் ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அந்த 3வது நபர் யார் என்றால், மு.க.ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் ராஜ்ய சபா எம்.பி-யாக நியமிக்கப்படுவார் என்று கூறுகின்றனர்.
இதன் மூலம், மு.க.ஸ்டாலின் தனது மருமகனை ராஜ்ய சபா எம்.பி ஆக்கி டெல்லி அரசிலை கவனிக்கும் பொறுப்பை ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, மு.க.ஸ்டாலின், மாநில அரசியலில் தனது மகன் உதயநிதியை திமுக இளைஞரணி செயலாளராக்கியதோடு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும் வெற்றி பெறச் செய்து மாநில அரசை கவனிப்பதற்கான வழியை செய்துள்ளார். இப்போது, மருமகனிடம் டெல்லி அரசியல் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்துள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னோட்டமாகத்தான், மு.க.ஸ்டாலின் கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும் ராகுல் காந்தியையும் சந்திக்க டெல்லி சென்றபோது சபரீசனை உடன் அழைத்துச் சென்றாரா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
மு.க.ஸ்டாலினின் இந்த முடிவு, அப்படியே கருணாநிதியைப் போல இருக்கிறது என்கிறார்கள். கருணாநிதி எப்படி, மாநில அரசியல் பொறுப்பை தனது மகனிடமும் டெல்லி அரசியல் பொறுப்பை தனது மருமகனிடமும் ஒப்படைத்தாரோ? அதே போல மு.க.ஸ்டாலினும் மேற்கொள்கிறாரா என்று தமிழக அரசியலில் பேசப்பட்டு வருகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stlalin-decides-to-send-sabareesan-to-delhi-politics-as-gossip-rises-306859/