23.5.2021 திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குருக்களுக்கு கொரோனா ஊடங்கு கால நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். உதயநிதியின் இந்த நடவடிக்கை திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜகவினரால் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது என்கின்றனர் திமுகவினர்.
மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவில் மாநில இளைஞரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டபோது திமுகவில் வாரிசு அரசியல் கொடிகட்டி பரப்பதற்கு மேலும் ஒரு சாட்சி என்று தமிழக அரசியல் களத்தில் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதையடுத்து, விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்களை அழைத்து இளைஞரணிக்கான கட்சிப் பணிகளைக் கொடுத்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். அதிமுக அரசை கடுமையாகவும் கிண்டலாகவும் விமர்சித்து பிரசாரம் செய்தார். அதே நேரத்தில், அவருக்கு போட்டியே இல்லாத சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 68 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடவுள் மறுப்பு, சமூக நீதி, சமத்துவம், தீண்டாமை, சாதி ஒழிப்பு, பெண் உரிமை ஆகிய கொள்கைகளை வலியுறுத்தி செயல்பட்ட பெரியார் தலைமையிலான திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா தலைமையில் திமுக உருவாகி தேர்தல் அரசியலை சந்தித்த காலத்தில் இருந்தே திமுக மீது இரண்டு விதமான அழுத்தங்கள் இருந்து கொண்டே இருக்கிறது. ஒன்று அது திமுகவுக்கு உள்ளே இருந்து கொள்கைவாதிகளால் முன்வைக்கப்படும் கடவுள் மறுப்பை கடைபிடிக்க வேண்டும் என்பது. மற்றொன்று, திமுகவுக்கு எதிரானவர்கள், திமுக வெகுஜன மக்களின் சமய நம்பிக்கையை புறக்கணிக்கிறது. வெகுமக்களின் கடவுள் நம்பிக்கையை விமர்சனம் செய்கிறது என்ற விமர்சனங்கள் ஆகும். இந்த 2 அழுத்தங்களையும் நீர்த்துப் போகிற வகையில், அண்ணா அவர் காலத்திலேயே பதிலளித்துவிட்டார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன். பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்க மாட்டேன் என்று கூறி தேர்தல் அரசியலில் இந்த 2 விதமான அழுத்தங்களுக்கும் பதிலளித்து நடைமுறை ரீதியாக நடந்துகொண்டார். ஆனாலும், அண்ணாவுக்கு பிறகும், கருணாநிதிக்கும் பிறகும் இன்றும் இந்த 2 அழுத்தங்களும் தொடர்கிறது.
திமுகவின் கடவுள் மறுப்பு கொள்கையில், கட்சி தொடங்கியபோது இருந்த 2ம் கட்ட தலைவர்கள் போல இல்லாமல், கால போக்கில் அதன் தலைவர்களே கோயில்களுக்கு செல்வதும் நன்கொடை அளிப்பதும் என்று ஆனது. அப்போதெல்லாம், திமுகவை கொள்கை வழி கட்சி என்று கூறுவதை சுட்டிக் காட்டும் பெரியாரிய ஆதரவாளர்கள், திமுக கொள்கையை கைவிட்டுவிட்டதா என்று விமர்சனம் செய்துவந்தனர். ஆனால், இந்த விமர்சனங்களை வைக்கும் ஆதவரவாளர்கள் ஒருகட்டத்தில் தங்கள் அழுத்தத்தின் பலத்தை இழந்துவிட்டனர். ஆனாலும், அதை சடங்குக்காகவேனும் பின்பற்ற வேண்டிய நிலைமை திமுகவுக்கு இருந்து வருகிறது. அதே போல, திமுகவுக்கு எதிரானவர்கள், தொடர்ந்து திமுக மீது இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இருப்பினும், திமுக தேர்தல் அரசியலில் வெற்றி பெற்றுதான் வருகிறது.
இதன் தொடர்ச்சியாகத்தான், மு.க.ஸ்டாலின்மனைவி கோயிலுக்கு செல்லும்போதெல்லாம், திமுக பெரியார், அண்ணா கொள்கையில் இருந்து விலகிவிட்டது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதற்கு மாறாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிப்பது இல்லை. முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் திருநீர் பூசிக்கொள்ள மறுத்து விமர்சனத்துக்குள்ளானர். ஆனால், உதயநிதி ஆதீனங்களை சந்தித்து நெற்றியில் திருநீர் பூசிக்கொண்டு ஆசி பெற்றார். இது ஒரு வகையில், மேற்குறிப்பிட்ட திமுகவுக்கு இருந்து வரும் 2 அழுத்தங்களையும் சரி செய்கிற நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்பு இருந்தே பாஜகவினரால், திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலடி கொடுப்பதற்காக, திமுக ஆட்சியில்தான் அதிகமான கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது என்று திமுக தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டது. எல்லா விமர்சனங்களையும் தாண்டி, திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதல்வரானார். உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும், உதயநிதி தனது தொகுதியில் அதிரடி ஆய்வுகளை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். திருவல்லிக்கேணி தொகுதியில் பழுதடைந்த பொது கழிப்பறையை பார்வையிட்டு அன்றைக்கே அதை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர செய்தார். குப்பை கொட்டும் இடங்களை பார்வையிட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தார். தொகுதியில் தனது தினசரி நடவடிக்கைகளை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்த சூழலில்தான், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், திமுக சார்பில், கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் தனது சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களை வழங்கினார். கொட்டும் மழையிலும் தொகுதியில் ஆய்வுகளை செய்துவருகிறார். அந்த வரிசையில், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று வழிபட தடை செய்யப்பட்டுள்ளதால், கோயில் அர்ச்சகர்கள், குருக்கள் வருமானம் இன்று பாதிக்கப்படுகின்றனர். அதனால், கோயில் குருக்களுக்கும் நிவாரணப் பொருட்களை வழங்க முடிவு செய்த உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயில் குருக்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்களாக, அரிசி, பருப்பு, மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி திருவல்லிக்கேணி தொகுதி கோயில் குருக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழக்கியிருப்பது திமுக மீது விமர்சனங்களை வைத்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் பிரதிநிதி என்பவர் எல்லா விமர்சனங்களையும் தாண்டி அனைவருக்கும் பொதுவானவராக நடந்துகொள்ள வேண்டும் என்பதே மக்களாட்சி. அந்த வகையில், உதயநிதி தனது நடவடிக்கைகளின் மூலம் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் என்கின்றனர் திமுகவினர்
source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-provides-relief-things-to-temple-priests-in-thiruvallikkeni-306173/