27.05.2021 தமிழக முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக இறங்கு முகத்தில் உள்ளது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஆனால் மேற்கு மண்டலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. குறிப்பாக நேற்று சென்னையை விட கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.
நேற்று 4,268 புதிய பாதிப்புகளுடன், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 35,000ஐ தாண்டியுள்ளது.
தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதற்கு முதன்மைக் காரணமாக கூறப்படுவது, இங்குள்ள ஏராளமான சிறிய தொழிற்சாலைகளே. இவற்றில் பெரும்பாலான தொழிற்சாலைகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை இயங்கி வந்தன. அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் அவர்களாகவே தொழிற்சாலைகளை மூடிவிட்டனர்.
மாவட்டத்தில் பதிவான கொரோனா தொற்று எண்ணிக்கையில் பெரும்பாலானவை, இதுபோன்ற சிறிய தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் அல்லது அவர்களது குடும்பத்தினரே. ஒரு சில தொழிற்சாலைகளில் 100க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோயம்புத்தூரில் முதல் அலையின் போது நகைப்பட்டறைகள் ஹாட்ஸ்பாட்களாக இருந்தன, தற்போது இந்த சிறிய தொழிற்சாலைகள் ஹாட்ஸ்பாட்களாக உள்ளன. இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் பாதிப்பு அதிகரிப்புக்கு காரணம் அங்குள்ள பின்னலாடை தொழிற்சாலைகள்தான்.
மேலும், இந்த மேற்கு பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு மற்றுமொரு காரணமாக சொல்லப்படுவது, அதிகப்படியான நபர்கள் வீட்டுத் தனிமையில் இருப்பதுதான். கோயம்புத்தூரில் கிட்டத்தட்ட 70% பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். வீட்டுத் தனிமையில் உள்ளவர்களால் அவர்கள் வீட்டில் மற்றவர்களுக்கும் தொற்று பாதிக்கிறது என சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் உள்ள படுக்கை பற்றாக்குறையே வீட்டுத் தனிமையில் அதிகம் பேர் இருக்க காரணம்.
மேலும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள், வாகன ஓட்டுனர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போன்றவர்களாலும் தொற்றுப் பரவல் அதிகரிக்கிறது.
நகர்புறங்களில் மட்டுமல்லாமல் கிராமபுறங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஊரகப் பகுதிகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பஞ்சாயத்து அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த குழுவில் பஞ்சாயத்து தலைவர், செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், செவிலியர் மற்றும் காவலர்கள் இடம் பெறுவர்.
இந்த இரண்டாம் அலையில் சென்னையில் பாதிப்புகள் அதிகமாக தொடங்கிய 10 நாட்களுக்குப் பிறகு கோவையில் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கின. தற்போது சென்னையில் பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ள நிலையில், கோவையிலும் பாதிப்புகள் விரைவில் குறையும் என்று மாவட்ட சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதேபோல் தமிழகத்தின் தெற்கு மண்டலத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மதுரையில் நேற்று 1,500 புதிய பாதிப்புகளுடன், சிகிச்சையிலிருப்போர்களின் எண்ணிக்கை 15,000ஐ தாண்டியுள்ளது. இதேபோல் கன்னியாகுமரியிலும் கடந்த 10 நாட்களாக தொற்று பாதிப்பு 1000ஐ தாண்டி வருகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/reason-behind-corona-cases-increasing-in-west-zone-of-tamilnadu-307528/