திங்கள், 31 மே, 2021

வீடுகளுக்கே வரும் மளிகைப் பொருட்கள்; தளர்வுகளுக்குப் பதில் தமிழக அரசின் புதிய திட்டம்

 30.05.2021 தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கின் பலனாக கொரோனா தாக்கம் சற்று குறைந்தாலும், பாதிப்பு எண்ணிக்கை மற்ற மாநிலங்களை விட அதிக அளவிலே உள்ளது.

ஊரடங்கு இன்று மே 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழக அரசு ஊரடங்கை ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. கடந்த வாரங்களில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்னர், பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான தளர்வு என்று அனைத்து சேவைகளுக்கும் அனுமதி அளித்திருந்தது. ஆனால் அந்த நாட்களில் பொதுமக்களின் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது.

இதனால் இந்த வார சனி, ஞாயிற்றுக்கிழமைகளான மே 29, 30களில் எந்தவித தளர்வும் அளிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மளிகைப் பொருட்களை பெறுவதில் உள்ள சிக்கலை நீக்க மளிகைப் பொருட்களை வாகனங்கள் மூலம் வீடு வீடாக சென்று விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மளிகை பொருட்களை வாகனங்களில் விற்க விரும்புபவர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று, தெருத் தெருவாக சென்று விற்பனை செய்யலாம்.

மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்க அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு வரலாம் அல்லது தொலைப்பேசி மூலம் கடைக்காரருக்கு தகவல் அளிக்கலாம். கடைக்காரர்கள் இந்த பொருட்களை வீடுகளுக்கே சென்று கொடுக்கலாம்.

இந்த நடைமுறையிலும் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்பக்க கதவை முழுவதுமாக திறப்பதற்கு பதில் பக்கவாட்டு கதவு அல்லது பின்பக்க கதவுகளை பயன்படுத்தி பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை விநியோகிக்க உள்ளாட்சி அமைப்புகளில் உரிமம் பெற்று கடை நடத்துபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும்.

சென்னையில் சுமார் 7,500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சியில் உரிமம் பெற்று கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைக்காரர்களுக்கு மட்டும் இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை விற்பனை செய்ய மாநகராட்சியில் இருந்து இன்று டோக்கன்கள் வழங்கப்பட்டன.

ஏற்கனவே காய்கறிகளை வாகனங்களில் வைத்து வீதிகளில் சென்று விற்பனை செய்பவர்கள் மளிகைப் பொருட்களையும் சேர்த்து விற்கலாம்.

தெருக்களுக்குச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் போது பொதுமக்களும் வியாபாரிகளும் கட்டாயம் முக கவசம் அணிவதோடு சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும்.

நிபந்தனைகளை மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த கடையின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் டோக்கன் பெறுவதற்கு வணிகர் சங்கங்கள் வியாபாரிகளுக்கு உதவி வருகின்றன. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள உரிமம் பெற்ற கடைக்காரர்கள் இன்று காலையில் மண்டல அலுவலகங்களுக்கு சென்று தங்களது கடை உரிமத்தைக் காட்டி டோக்கன்களை பெற்று சென்றனர்.

இதே போல் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் டோக்கன்களை பெற்று கடைக்காரர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் வீதி வீதியாக சென்று மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-govt-allows-home-provisions-at-door-delivery-308701/