வெள்ளி, 28 மே, 2021

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு!

 28/05/2021 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 10 நாட்களுக்கும் மேலாக 30 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வந்தது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மே 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் இ- பதிவு கட்டாயமாக்கப்பட்டது.


இதன் காரணமாக சென்னை உள்பட பல இடங்களில் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது. தொற்று மேலும் குறைய வேண்டுமானால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வெகுவாக எழுந்தது.


இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கு வரும் மே 31 காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

source https://news7tamil.live/lockdown-extended-in-tamilnadu-cm-mk-stalin-order.html