ஞாயிறு, 30 மே, 2021

திமுக எம்.பி ஆ.ராசாவின் மனைவி மரணம்

 

29.05.2021 திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து தமிழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தை முடித்த ஆ.ராசா அதனபிறகு தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியிருந்தார். ஏற்கனவே சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அங்கு கொடுக்கபட்ட சிகிச்சைக்கு அவர் உடல் ஒத்துழைப்பு கொடுத்தகாததால், இறுதியாக சென்னை  குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்

இவர் சிகிச்சையில் இருக்கும்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், நேரில் சந்தித்து அவர் உடல்நலம் குறித்து விசாரித்திருந்தார். இந்நிலையில், பரமேஸ்வரியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்திருந்த நிலையில்,  இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தி.மு.கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா அவர்களின் வாழ்விணையர் திருமதி. பரமேஸ்வரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

திராவிடத் தத்துவத்தினை அரசியல் பாடமாகப் பயின்று பொதுவாழ்வில் ஈடுபட்ட ஆ.ராசாவின் உயர்விலும் – தாழ்விலும், நெருக்கடிகளிலும் – சோதனைகளிலும் தோன்றாத் துணையாக உடனிருந்து அவரது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அம்மையார் பரமேஸ்வரி. அவரது மறைவு ஏற்படுத்தும் பெருந்துயரால் வேதனையில் வாடும் ஆ.ராசாவின் கரங்களைப் பற்றி ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமதி.பரமேஸ்வரியின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆ.ராசா இந்தத் துயரில் இருந்து மீண்டெழ, உடன்பிறப்பு என்ற சொல்லுக்கேற்ப கழகம் தோள் கொடுத்துத் துணை நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-dmk-mp-a-rasa-wife-passed-away-for-cancer-injury-in-chennai-308501/