24.5.2021 PSBB School Chennai Commerce Teacher Sexual Harrasment News Tamil : சென்னை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் பி.எஸ்.பி.பி பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இணநத சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பி.எஸ்.பி.பி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை போலிசார் கைது செய்தனர்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவிகள் ஆசிரியர் குறித்து தெரிவித்த கருத்துகள், முன்னாள் மாணவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிவந்ததை தொடர்ந்து, 20 ஆண்டுகளாக அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்பறை மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் செய்த பாலியல் சில்மிசங்களை, அவரால் பாதிக்கப்பட்ட பல மாணவர்களும் முன்னாள் மாணவியை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களை தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் ராஜகோபாலன் தங்களிடம் புகைப்படங்களை தனக்கு அனுப்புமாறும், திரைப்படத்திற்கு அழைத்ததாகவும் மாணவிகள் குற்றம் சாட்டி உள்ளனர். ஆசிரியரின் அத்துமீறிய நடத்தை குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த போதிலும், அவர்கள் கண்டுக் கொள்ளவில்லை எனவும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக, திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ட்விட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ‘சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்’ என பதிவிட்டடிருந்தார்.
பி.எஸ்.பி.பி பள்ளியின் இயக்குநர் கீதா கோவிந்தராஜன், மாணவிகள் ஆசிரியர் மீதான பாலியல் புகார்களை பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் தகவல்களை மறுத்துள்ளார். இருப்பினும், தற்போது ஆசிரியர் மீது எழுந்திருக்க கூடிய குற்றச்சாட்டுகளை கவனித்து வருவதாகவும், நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் தீர்வினை காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் நலனே முக்கியம் என்பதால், விரைவான முடிவுகள் எட்டப்படும் என்றும் கூறியுள்ளார்.
கனிமொழியின் பதிவை அடுத்து விசயம் அரசு துறைகளுக்கு விரைய, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புகார் குறித்து விசாரிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், சம்பவம் குறித்து முறையான விசாரனை நடத்துவதற்காக பள்ளியில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் விசாரனை தகவல்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் அளிக்கப்படும் எனவும் தெரிய வருகிறது.
இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. தயாநிதி மாறன், ‘பி.எஸ்.பி.பி.யில் ஒரு ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக கிளம்பி இருக்கும் குற்றச்சாட்டு ஒரு பெற்றோராக தன்னை அச்சமடைய செய்துள்ளதாகவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க நிர்வாகம் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். இந்நிலையில், ஆசிரியர் ராஜபோபாலனை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் பி.எஸ்.பி.பி பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் இன்று மாலை (மே 24) போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும், பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்கள் மூலம் புகாரளிக்க முன்வர வேண்டும். புகார் அளிப்பவர்களின் விவரங்கள், ரகசியம் காக்கப்படும். எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் வராது என சென்னை காவல்துரை உத்தரவாதம் அளித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-psbb-school-commerce-teacher-sexual-harrasment-complaint-anbil-mahesh-investigate-ceo-students-alumini-306466/