29.05.2019 Why Lakshadweep Administration proposals have upset locals : லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகி ப்ரஃபுல் படேல் முன்வைத்த பல்வேறு திட்டங்கள் கடந்த சில வாரங்களாக லட்சத்தீவு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தினேஷ்வர் ஷர்மா மறைவிற்கு பிறகு தாத்ரா நாகர் ஹவேலியின் நிர்வாகியாக இருந்த படேல் கூடுதலாக லட்சத்தீவு நிர்வாகியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாலத்தீவுகளுக்கு இணையாக லட்சத்தீவினை சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்கும், இங்கு குடியிருக்கும் மக்களின் பாதுகாப்பையும் நல்வாழ்க்கையையும் உறுதி செய்யும் விதமாக இந்த திட்டங்கள் அமைந்துள்ளது என்று யு.டி. நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் இது இங்குள்ள கலாச்சார மற்றும் சமூக நடைமுறைகளை துண்டாடும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள திட்டங்களும் மக்களின் எதிர்ப்பும் என்னவென்று நாம் இங்கே காண்போம்
மாட்டிறைச்சி
திட்டம் : மாடு, கன்று, காளை மற்றும் எருமைகளை உணவிற்காக கொல்வதற்கு, முறையான அதிகாரியின் சான்று இல்லாமல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மாட்டிறைச்சி விற்பனை, சேமிப்பு மற்றும் விநியோகத்திற்கு தடை விதித்துள்ளது. அபராதங்களில் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனையும், ரூ .10,000 அபராதமும் அடங்கும். இந்த விதி ஏன் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து நிர்வாகம் விளக்கம் அளிக்கவில்லை.
மக்களின் எதிர்ப்பு : இங்கு வசிக்கும் மக்கள் தங்களின் கலாச்சாரம் மற்றும் உணவு பழக்கத்தில் நேரடியாக தலையிடுவதாக இந்த விதியை கருதுகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசிக்காமல் இந்த விதி முடிவு செய்யப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இரண்டு குழந்தை கொள்கை
திட்டம் : பஞ்சாயத்து ஒழுங்குமுறை 2021 வரைவின் கீழ் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொண்டால் அவர்கள் கிராம பஞ்சாயத்தின் ஒரு உறுப்பினராக வரமுடியாது. ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்க்களுக்கு இந்த விதி பொருந்தாது. ஆனால் விதிமுறை நடைமுறைக்கு வந்த தேதிக்குப் பிறகு அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
மக்களின் எதிர்ப்பு : உள்ளூர்வாசிகள் இந்த நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். என்.சி.பி மற்றும் காங்கிரஸும் இந்த நடவடிக்கையை எதிர்த்தன.
சுற்றுலா பயணிகளுக்கு மது வழங்குதல்
திட்ட முன்மொழிவு : மக்கள் வசிக்கும் தீவுகளில் உள்ள ரெசார்ட்களில் சுற்றுலா பயணிகளுக்கு மதுபானம் வழங்க அனுமதி அளிக்கப்படும். தற்போது தற்போது, மக்கள் வசிக்கும் அனைத்து தீவுகளிலும் தடை நடைமுறையில் உள்ளது, மக்கள் வசிக்காத பங்கரம் தீவில் உள்ள ரிசார்ட்களில் மட்டுமே மதுபானம் வழங்கப்படுகிறது மதுபானம் ரெசார்ட்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும் உள்ளூர் காரர்களுக்கு இல்லை என்று மாவட்ட ஆட்சியார் எஸ். அஸ்கர் அலி தெளிப்படுத்தியுள்ளார்.
மக்களின் எதிர்ப்பு : இந்த நடவடிக்கை தீவில் மது விற்பனையின் பெருக்கத்திற்கு வழிவகுக்கும் என்று குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நிலம் கையகப்படுத்தும் அதிகாரம்
திட்ட முன்மொழிவு : லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை (எல்.டி.ஏ.ஆர்) (Lakshadweep Development Authority Regulation (LDAR)) வரைவை நிர்வாகம் கொண்டுவந்துள்ளது. இது தீவுகளில் நகர மேம்பாட்டிற்காக நிலத்தை கையகப்படுத்தி பயன்படுத்த முடியும். பெரிய திட்டங்களுக்கு வெளிப்படையாக, நில பயன்பாட்டு வரைபடம் மற்றும் பதிவுகளை தயாரிப்பதற்காக திட்டமிடல் பகுதிகளை அறிவித்தல், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரிகளின் அதிகார வரம்புகள் குறித்து அது பேசுகிறது.
மக்களின் எதிர்ப்பு : குடிமக்களின் ஆலோசனைகளை கேட்காமல் இந்த திட்டத்தை முன்மொழிவு செய்ததற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு கூறி வருகின்றனர். பெரிய அளவிலான உள்கட்டமை மற்றும் சுற்றுலா திட்டங்கள் இங்கிருக்கும் சுற்றுச்சூழலை சீர்குலைக்கும் என்றும், எஸ்.டி குடியிருப்பாளர்கள் வைத்திருக்கும் சிறிய அளவிலான நிலங்களை அப்புறப்படுத்த நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
குண்டர்கள் எதிர்ப்பு கட்டுப்பாடு
திட்ட முன்மொழிவு : ஒரு நபரை, பொது ஒழுங்கைப் பேணுவதற்காக, எந்தவொரு விதத்திலும் பாரபட்சமின்றி செயல்படுவதைத் தடுக்க ஒரு வருடம் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான அதிகாரங்களை லட்சத்தீவு சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்பு விதிமுறை ( draft Lakshadweep Prevention of Anti-Social Activities Regulation) வழங்குகிறது. சமூக விரோத நடவடிக்கைகளுக்கு ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் இல்லாமல் ஒரு நபரை தடுப்புக் காவலில் வைக்க இந்த வரைவு அதிகாரம் வழங்குகிறது. தீவு அமைதியாக இருக்கின்ற போதும், வெடிமருந்து, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டறியப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். சட்டவிரோத வணிகங்களால் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவதைத் தடுக்க கட்டுப்பாடு தேவை என்று அவர் கூறினார்.
மக்களின் எதிர்ப்பு : நாட்டிலேயே மிகவும் குறைவான குற்ற விகிதங்களைக் கொண்டிருக்கும் ஒரு பகுதியில் இந்த கடுமையான விதிக்கான தேவை என்ன என்று குடிமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நிர்வாகத்தை எதிர்ப்பவர்களைக் கைது செய்வதற்காக இது கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோவிட் எஸ்.ஒ.பி
திட்ட முன்மொழிவு : ஒரு வருடத்திற்கும் மேலாக லட்சத்தீவில் ஒரு கொரோனா தொற்று கூட பதிவு செய்யப்படவில்லை. கடுமையான தனிமைப்படுத்தும் நெறிமுறைகள் மற்றும் தீவுகளுக்கு வரும் பயணிகளுக்கு சோதனைகளை மேற்கொள்ளுதல் மூலம் இது சாத்தியமானது. ஆனால் கடந்த டிசம்பரில், கொச்சி மற்றும் காவரட்டியில் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தலை நீக்கி கொரோனா நிலையான இயக்க நடைமுறைகள் நீர்த்து போக வழிசெய்தது. அதற்கு பதிலாக பயண நாளுக்கு முன்பு 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகளில் எதிர்மறை கொண்ட எவரும் லட்சத்தீவுக்குள் பயணம் மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. உள்துறை அமைச்சக விதிகளின்படி பொருளாதார முன்னேற்றம் அடைவதற்காக SOPக்கள் மாற்றப்பட்டதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மக்களின் எதிர்ப்பு : இந்த மாற்றம் பசுமை மண்டலம் என்ற பெயரையும் கொரோனா வீழ்ச்சி விகிதத்தையும் அடுத்தடுத்த மாதங்களில் இழந்தது. மே 28ம் தேதி கணக்கின் படி, லட்சத்தீவில் 7300 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதோடு கொரோனாவிற்கு 28 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தொற்றுநோயை நிர்வாகம் தவறாக கையாண்டுள்ளது என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர் அவர்கள்.
லட்சத்தீவு மக்களும் அரசியலும்
அமைவிடம் : 12 பவழப்பாறை சங்கிலியில் 36 தீவுகள் கேரளாவிற்கு அருகில் அமைந்துள்ளது. பெரும்பாலான அத்தியாவசிய விநியோகத்திற்கு கேரளாவையே நம்பியுள்ளன. 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசித்து வருகின்றனர். மெட்ராஸ் மாகாணத்தின் மலபார் மாவட்டத்தின் கீழ் இயங்கி வந்த லட்சத்தீவிற்கு, 1956ம் ஆண்டு கேரள மாநிலம் உருவான போது, யூனியன் பிரதேச அந்தஸ்த்து வழங்கப்பட்டது.
டெமோகிராஃபி : இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 65 ஆயிரம் நபர்கள் வசித்து வருகின்றனர். அதில் யூனியன் பிரதேங்களில் உள்ள இஸ்லாமியர்களில் 96%-த்தையும், பட்டியல் பழங்குடிகளில் 94.8%-த்தையும் லட்சத்தீவு கொண்டுள்ளது. மலையாளம் மற்றும் திவேஹி மொழியை இம்மக்கள் பேசுகின்றனர்.
அரசியல் : ஒரே ஒரு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவி மட்டுமே உள்ளது. தற்போது முகமது ஃபைசல் பி.பி. (என்.சி.பி) உறுப்பினராக இருக்கிறார். என்.சி.பி மற்றும் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தும் கட்சிகளாக உள்ளது. பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அங்கே அலுவலகங்கள் உள்ளன. பி எம் சயீத் 1967-2004 காலப்பகுதியில் தொடர்ச்சியாக 10 முறை வெற்றி பெற்றுள்ளார். அதில் 8 முறை காங்கிரஸ் டிக்கெட்டில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தகக்து. அவருடைய மகன் முகமது ஹம்துல்லா சயீத் 2009 -2014 காலகட்டத்தில் எம்.பி.யாக பொறுப்பு வகித்தார்.