25.5.2021PSBB School Chennai Commerce Teacher Sexual Harrasment News Tamil : சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியான பி.எஸ்.பி.பி பள்ளியில், மேனிலை வகுப்புகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் என்பவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின், போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழங்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்கள் மூலம் புகார் அளிக்க முன் வர வேண்டும் என சென்னை காவல்துறை வேண்டுகோள் விதித்திருந்தது. புகார் அளிப்பவர்களின் தலவல்கள் ரகசியம் காக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்திருந்தது. காவல்துறையின் வேண்டுகோளை அடுத்து, ஆசிரியர் ராஜகோபாலன் மீது, அவரது அத்துமிறல்களால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் புகார் அளித்தார். புகாரில் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக பேசியதாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
புகார் பெறப்பட்டதை அடுத்து, போக்சோ உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளியில் உள்ள வேறு சிலருக்கும் இதில் தொடர்புள்ளதாக ராஜகோபாலன் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகவும் அவர் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறை விசாரணைக்கு பின், ராஜகோபாலன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராஜகோபாலனை வருகின்ற ஜூன் 80ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகாக, காவல்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் வகுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், ‘பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியருக்கு எதிராக, பாதிக்கப்பட்ட மாணவிகளிடமிருந்து தனிப்பட்ட புகார்கள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, ஸ்கிரீன் ஸாட்டுகள் உள்பட பல ஆதாரங்கள் காவல்துறை வசம் உள்ளன. சமூக வலைதளங்களில் ராஜகோபாலன் குறித்து, பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தாலும், காவல்துறை விசாரணையை மேற்கொள்ள முறையான புகார்களை பெற முயற்சிப்பதாக’, தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் பள்ளிக்குள் சென்று விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சென்னை நகர காவல்துறையின் சிறப்புப் பிரிவான பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக எஸ்.பி ஜெயலட்சுமி பொறுப்பேற்று,நேற்று பள்ளியில் விசாரணை நடத்தினார். திங்களன்று, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்குவதைத் தெளிவுபடுத்தியதால், பள்ளியின் வட்டாரங்கள் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தை சமர்பித்தது. தவறான நடத்தை தொடர்பான சில கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-psbb-school-commerce-teacher-sexual-harrasment-complaint-investigate-ceo-students-alumini-arrest-pocso-jailed-306733/