26.05.2021 577 children orphaned in second wave of pandemic : இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தொற்று பாதிப்பினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 4000-க்கும் மேல் பதிவாகி வரும் நிலையில், நேற்று மத்திய பெண்கள் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தொடங்கியது முதல் கடந்த 55 நாள்களில், 577 குழந்தைகளின் பெற்றோர்கள் கொரோனாவில் இறக்க, அவர்கள் ஆதரவற்றோர்களாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ட்விட்டர்ல் கருத்து தெரிவித்துள்ள மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தங்களது பெற்றோர்களை இழந்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதரவும், பாதுகாப்பும் வழங்க அரசாங்கம் உறுதி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாத தொடக்கம் முதல் தற்போது வரை, நாடு முழுவதும் 577 குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளதாகவும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவினால் பெற்றோர்களை இழந்து நிர்கதியாகி இருக்கும் குழந்தைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மூலம் வெளிவர தொடங்கிய நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அமைச்சகம் உத்தரவிட்டதாக, மூத்த அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார். அமைச்சகத்தின் உத்தரவை அடுத்து, அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுக்கு பெற்றோர்களை இழந்த குழந்தைகளை அடையாளம் காணும் படி கேட்டுக் கொண்டுள்ளோம். அனைத்து மாநிலங்களிலிருந்தும் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இதுவரை நாடு முழுவதும் 577 குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றோர்களாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளை நிறுவனம் சாரா பராமரிப்புக்காக ஒரு மாவட்டத்திற்கு ரூ .10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அவை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட நீதவான் மூலம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கள் நோக்கம் என்னவென்றால், ஒரு குழந்தை கூட பெற்றோர்களை இழந்து சிரமப்படக்கூடாது என்பது தான். இருப்பினும், குழந்தைகளை அவர்களின் குடும்பம் மற்றும் சமூக கட்டமைப்புகளிலேயே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறோம்.
தொற்றுநோயால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றவர்களாகியுள்ள குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பல மாநிலங்கள் அறிவித்துள்ள நேரத்தில், மத்திய அமைச்சின் எண்ணிக்கை வந்துள்ளது. டெல்லி, பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை நிதி உதவியைத் தவிர இலவச கல்வியை வழங்குவதாக உறுதியளித்துள்ளன. உத்தரகண்ட், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளன.
இந்த குழந்தைகளை கண்காணிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, மாவட்டங்களில் உள்ள நலக் குழுக்கள் மற்றும் குழந்தைகள், இளம்பருவ மனநல பராமரிப்புக்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் மூலம் ஒருங்கிணைக்க முயற்சி எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த குழந்தைகளை தத்தெடுப்பதற்காக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளுக்கு எதிராக, மே 17 அன்று மத்திய குழந்தைகள் நல அமைச்சகம் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டது. அதில், இது சிறுவர் கடத்தலுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தச் செய்திகளில் ஏராளமானவை குறித்து நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். அவை அனைத்தும் இதுவரை போலியானவை எனக் கண்டறிந்துள்ளோம். சைபர் பிரிவுடன் இந்த விசாரணையைத் தொடரும் மாநில காவல் துறையிடம் அனைத்து தகவல்களும் ஒப்ப்டைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நடவடிக்கைகளை கண்காணித்து, இந்த குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நலக் குழுக்களுக்கு முன் ஆஜர்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு, மத்திய குழந்தைகள் நல அமைச்சகம் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 1098 என்ற குழந்தைகள் நல இலவச எண்ணிலும் மேலதிக தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/india/in-deluge-of-covid-numbers-one-stands-out-577-children-orphaned-in-second-wave-of-pandemic-307098/