சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரும் முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான டி.எம்.காளியண்ணன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று (மே 28) மதியம் காலமானார். அவருக்கு வயது 101.
டி.எம்.காளியண்ணன் திருச்செங்கோடு அருகே குமரமங்கலத்தில் 1921ம் ஆண்டு பிறந்தார். அன்றைக்கு சேலம் மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது 50க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய குமரமங்கலம் போக்கம்பாளையம் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த டி.எம்.காளியண்ணன். சென்னை லயோலா மற்றும் பச்சையப்பா கல்லூரியில் உயர்கல்வியைப் படித்த அவர், கல்லூரி காலத்திலேயே தேசப்பற்றுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காந்திய வழியைப் பின்பற்றிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அரசியல் சாசன சிற்பி அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டார்
டி.எம். காளியண்ண, இந்தியா சுந்தந்திரம் அடைந்தபின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையில், அன்றைக்கு சென்னை மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் 40 பேர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில் உயிருடன் இருந்த கடைசி உறுப்பினர் டி.எம்.காளியண்ணன்.
ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த டி.எம்.காளியண்ணனுக்கு ராஜேசுவரன், கிரிராஜ்குமார் என்ற இரு மகன்களும், சாந்தா, வசந்தா, விஜயா ஆகிய மூன்று மகள்களும் உண்டு. இதில் கிரிராஜ்குமார் காலமாகிவிட்டார்.
சுதந்திரப் போராட்டத்தின் வழியாகவும், காந்தியவாதி என்ற வகையிலும் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்ட தியாகி டி.எம்.காளியண்ணன், 1952–ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைடுத்து, 1957–1962, 1962–1967 திருச்செங்கோடு எம்.எல்.ஏ-வாக இருந்தார்.
இவர் 1969–ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேலவை இருந்தபோது 2 முறை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதன் பிறகு, சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவினாலும், அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர், பொருளாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். முதுமை காரணமாக டி.எம்.காளியண்ணன் 2000க்கு பிறகு அரசியலை விட்டு விலகி ஓய்வெடுத்து வந்தார்.
ஆனாலும், எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் முதுபெரும் தலைவர் டி.எம்.காளியண்ணனிடம் ஆசிபெற்று செல்வார்கள். நூற்றாண்டு கண்ட தலைவர் டி.எம்.காளியண்ணன் கடநெத சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அவர் திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவருடைய உடல்நிலை மோசமடைந்து இன்று (மே 28) மதியம் 2 மணிக்கு உயிரிழந்தார்.
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினருமான டி.எம்.காளியண்ணன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல் நிர்ணயசபை உறப்பினருமான டி.எம்.காளியண்ணன் தமது 101 வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும் துயரமும் அடைந்தேன். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவராக, பொருளாளராக பதவி வகித்து பெரும்பணியாற்றியவர்.” என்று தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tm-kaliyannan-passes-away-due-to-covid-19-308141/