ஞாயிறு, 30 மே, 2021

நிலுவையில் CAA விதிகள்; ஆனாலும் 5 மாநிலங்கள் குடியுரிமை வழங்க அனுமதி அளித்த மத்திய அரசு

 

29/05/2021 குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) 2019 இன் கீழ் மத்திய அரசு இன்னும் விதிகளை வகுக்கவில்லை என்பதால், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 13 மாவட்டங்களின்  அதிகாரிகளுக்கு தற்போதுள்ள விதிகளின் கீழ் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான அதிகாரங்களை வழங்குவதற்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த, சமண சமூகத்தினர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளடக்கப்பட்ட சமூகங்கள் விண்ணப்பிக்கலாம் என பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு கூறுகிறது.

குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை விதிகள், 2009 ஆகியவற்றின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஆனால் குடியுரிமையின் கீழ் அல்ல.

குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 ன் விதிகள் இன்னும் வடிவமைக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோன்ற அறிவிப்பு 2018 ஆம் ஆண்டிலும் பல மாநிலங்களில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் வெளியிடப்பட்டது.

“குடியுரிமைச் சட்டம், 1955 (1955 இன் 57) இன் 16 வது பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில், மத்திய அரசு இதன்மூலம் அதைப் பயன்படுத்தக்கூடிய அதிகாரங்களை, பிரிவு 5 இன் கீழ் இந்திய குடிமகனாக பதிவு செய்ய, அல்லது சான்றிதழ் வழங்குவதற்காக ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எந்தவொரு நபருக்கும், அதாவது இந்துக்கள், சீக்கியர்கள், புத்த, சமண சமூகத்தினர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமைச் சட்டம் 1955 இன் பிரிவு 6 இன் கீழ் குடியுரிமை வழங்க, விண்ணப்பதாரர் பொதுவாக வசிக்ககூடிய அதிகார எல்லைக்குள் உட்பட்ட மாவட்ட ஆட்சியர் நடைமுறைகளை செயல்படுத்துவார், ”என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அறிவிப்பில் பட்டியலிடப்பட்ட மாவட்டங்கள்: மோர்பி, ராஜ்கோட், பதான் மற்றும் வதோதரா (குஜராத்); துர்க் மற்றும் பலோதபஜார் (சத்தீஸ்கர்); ஜலூர், உதய்பூர், பாலி, பார்மர் மற்றும் சிரோஹி (ராஜஸ்தான்); ஃபரிதாபாத் (ஹரியானா); மற்றும், ஜலந்தர் (பஞ்சாப்).

ஃபரிதாபாத் மற்றும் ஜலந்தர் தவிர, ஹரியானா மற்றும் பஞ்சாபின் உள்துறை செயலாளர்களுக்கும் இது போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

“விண்ணப்பத்தின் சரிபார்ப்பு கலெக்டர் அல்லது செயலாளரால் ஒரே நேரத்தில் செய்யப்படுகிறது, இது மாவட்ட மட்டத்திலும், மாநில மட்டத்திலும் இருக்கலாம், மேலும் விண்ணப்பம் மற்றும் அதன் அறிக்கைகள் ஒரே நேரத்தில் ஆன்லைன் போர்ட்டலில் மத்திய அரசுக்கு அணுகப்படும், ”என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

“கலெக்டர் அல்லது செயலாளர், விண்ணப்பதாரரின் தகுதியால் திருப்தி அடைந்தால், பதிவு அல்லது இயற்கையாக குடியுரிமை பெறுவதன் மூலம் அவருக்கு இந்திய குடியுரிமையை வழங்குகிறார் மற்றும் அதற்கான சான்றிதழையும் வழங்குகிறார். அதாவது விண்ணப்பம் கூறப்பட்ட விதிகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் இருக்கும் பட்சத்தில் கலெக்டர் அல்லது செயலாளரால் கையொப்பமிடப்பட்டு, ஆன்லைன் போர்ட்டலில் இருந்து முறையாக அச்சிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும், ”என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடிமகனாக பதிவுசெய்தல் அல்லது இயற்கையாக குடியுரிமை பெறுதல் மூலம் குடியுரிமை வழங்கப்பட்ட நபரின் விவரங்களைக் கொண்ட ஒரு ஆன்லைன் மற்றும் ஆவண பதிவேட்டை கலெக்டர் மற்றும் செயலாளர் பராமரிக்க வேண்டும். மேலும் வழங்கப்பட்ட அந்த குடியுரிமைச் சான்றிதழ் மற்றும் விண்ணப்பதாரரின் விவரங்கள் அடங்கிய ஒரு நகலை ஏழு நாட்களுக்குள் மத்திய அரசுக்கு வழங்கவும் அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களின் கலெக்டர்கள் மற்றும் உள்துறை செயலாளர்களுக்கு சில மாவட்டங்கள் தொடர்பாக 2018 ஆம் ஆண்டில் அரசாங்கம் இதே போன்ற அதிகாரங்களை வழங்கியது.

பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்து, சமண, சீக்கிய, பார்சி, கிறிஸ்தவ மற்றும் புத்த சமூகங்களைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமைச் சட்டத்தை 2019 டிசம்பரில் பாராளுமன்றம் திருத்தியது. ஆனால் இந்த திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் இடம்பெறவில்லை. எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது, எதிர்கட்சிகள் இந்த சட்டத்தை பாரபட்சமானது என்று கூறியதுடன், நாடு தழுவிய அளவில் பெரும் போராட்டங்களையும் தூண்டியது.

ஒரு வருடத்திற்கும் மேலாக CAA விதிகளை உருவாக்குவது குறித்து உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், “சட்டத்தை செயல்படுத்த விதிகள் அவசியம். கட் ஆப் தேதிக்கு முன்னர் (டிசம்பர் 31, 2014) விண்ணப்பதாரர் இந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தாரா இல்லையா என்பதை நிரூபிக்க தேவையான ஆவணங்களை விதிகள் குறிப்பிட வேண்டும். பெரும்பாலான சட்டவிரோத குடியேறியவர்கள் எந்தவொரு பயண ஆவணங்களும் இல்லாமல் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர், ”என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

source https://tamil.indianexpress.com/india/caa-citizenship-act-non-muslim-immigrants-308235/