ஞாயிறு, 30 மே, 2021

GST கவுன்சில் கூட்டம்; கோவிட் மருத்துகளுக்கு 0% வரியை வலியுறுத்திய தமிழக அரசு

 

29/05/2021 TN Govt demand for 0% GST on Covid drugs : தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரம் அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக பல கோடி ரூபாய் பொருள் செலவில் மருந்துப் பொருள்களை மாநில அரசுகள் வாங்கி வருகின்றன. இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் சார்பில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கு பெற்றார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் உரையை ஆற்றினார். இந்தியாவில் உள்ள வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள குறைபாடுகள் சுட்டிக் காட்டினார். மேலும், தமிழக அரசை பாதிக்கும் மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் குறித்த விரிவான விளக்கங்களை தனது உரை மூலம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசிடம் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், ‘கொரோனா தொற்று இந்தியாவில் அதி தீவிரமடைந்துள்ள சமயத்தில் மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமை பணியாக கொரோனா தடுப்பு பணிகளே இருந்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநில அரசுகள் கோவிட் தடுப்பூசிகள் மற்றும் ரெம்டெசிவிர், டோசிலிசுமாப் உள்ளிட்ட மருந்துகளை கொள்முதல் செய்வதை முதன்மை பணியாக செய்து வருகிறது. இந்த சூழலில், இவற்றை கொள்முதல் செய்யும் போது, இவற்றுக்கான ஜி.எஸ்.டி வரியை பூஜ்ஜியமாக மத்திய அரசு நிர்ணயித்தால் மாநில அரசுகளுக்கு பேருதவியாக இருக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்கு முன்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அதன்படி, இதுபோன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி பூஜ்ஜிய மதிப்பீடு குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். இதுபோன்ற பூஜ்ஜிய ஜி.எஸ்.டி மதிப்பீட்டை செயல்படுத்துவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. ஆனால், இந்த சட்ட சிக்கல்களை தேவையான சட்டங்கள் மூலமாகவோ அல்லது ஒருமித்த கருத்தை எட்டியவுடன் அதிகாரப்புர்வ அறிவிப்புகள் மூலமாகவோ சமாளிக்க முடியும்’ என்பதை தனது உரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிகாட்டி உள்ளார்.

மாநிலங்களுக்கான பாதுகாக்கப்பட்ட வருவாய்க்கும், உண்மையான எதிர்பார்க்கப்படும் வருவாய்க்கும் இடையில் 2021-22 ஆம் ஆண்டில் எழும் இடைவெளியை மாநிலங்களுக்கு முழுமையாக ஈடுசெய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மத்திய அரசை கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொற்றுநோயின் நீண்ட கால விளைவுகளை கருத்தில் கொண்டு, 2022 ஜூலை 1 க்கு அப்பால் இழப்பீட்டு ஏற்பாட்டை நீட்டிப்பதும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-demand-for-zero-percent-covid-medicines-drugs-gst-counsil-ptr-finance-minister-nirmala-seetharaman-308251/