Fugitive businessman Mehul Choksi held in Dominica : வங்கி மோசடி வழக்கில் இந்தியாவின் தேடப்படும் நிதி மோசடி குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் மெஹூல் சோக்ஸி டொமினிக்கா குடியரசில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் அவருக்கு கைது வாரண்ட் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் ஆண்டிகுவா மற்றும் பார்படா நாட்டிற்கு தப்பியோடினார்.
2018ம் ஆண்டில் இருந்து கரீபியன் நாட்டு பிரஜையாக வலம் வரும் சோக்ஸி அவருடைய வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார் என்று புகாஅர் அளிக்கப்பட்ட நிலையில் அவரை டொமினிகா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக அண்டிகுவாவில் இயங்கி வரும் சர்வதேச புலனாய்வான இண்டெர்போல் மஞ்சள் அறிக்கை வெளியிட்டிருந்தது. தற்போது டொமினிக்காவில் இருந்து அவரை பார்படாவிற்கு திருப்பி அழைத்து செல்ல தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் தேசிய வங்கி (PNB)யில் ரூ. 13,600 கோடி நிதி மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டிகுவாவின் ஜான்சன் பாய்ண்ட் காவல்நிலையத்தில், மே 23ம் தேதியில் இருந்து மெஹூலை காணவில்லை என்று புகார் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ராயல் காவல்பிரிவு அறிவித்துள்ளது. மேற்கூறிய நாளில் தன்னுடைய வீட்டில் இருந்து 5:15 மணிக்கு வெளியேறிய அவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று மே 24ம் தேதி அறிக்கை வெளியிட்டது காவல்துறை.
பிரதம மந்திரி காஸ்டன் பிரவுன், சோக்ஸியைக் கண்டுபிடிப்பதற்கு இந்திய அரசு, அண்டை நாடுகள் மற்றும் சர்வதேச காவல் அமைப்புகளுடன் ஒத்துழைப்பதாக கூறினார். அவருடைய வீட்டில் இருந்த ஒருவர், அவரைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து தேடும் பணி தீவிரமானது.
சோக்ஸிக்காக இந்தியாவில் வாதாடும் அவருடைய வழக்கறிஞர் விஜய் அகர்வால், சோக்ஸி எங்கே இருக்கிறார் என்பது அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாது. சோக்ஸி காணவில்லை. அவருடைய குடும்பத்தினர் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். ஆண்டிகுவா காவல் துறையினரிடம் பேசி நிலைமை என்ன அறிந்து வருகின்றனர். அவருக்கு என்ன நடந்தது என தெரியவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
சோக்ஸி ஜனவரி 7, 2018ம் ஆண்டு, பஞ்சாப் தேசிய வங்கியில் நடைபெற்ற நிதி மோசடிகள் வெளிச்சத்திற்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவில் இருந்து வெளியேறினார். ஜனவரி 15ம் தேதி அன்று அவர் ஆண்டிகுவா பார்படா நாட்டின் குடிமகனாக மாறினார். முதலீடு திட்டத்தின் கீழ் அந்நாட்டில் 2017ம் ஆண்டு நவம்பர் மாதமே குடியுரிமை பெற விண்ணப்பித்திருந்தார். சோக்ஸியின் உறவினரான நிரவ் மோடியும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி. அவர் தற்போது இங்கிலாந்தில் சிறையில் உள்ளார். அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
source https://tamil.indianexpress.com/india/fugitive-businessman-mehul-choksi-held-in-dominica-307502/