திங்கள், 24 மே, 2021

பொது நிவாரண நிதிக்கு 181 கோடி ; கோவிட் பரிசோதனை கிட் வாங்க 50 கோடி ஒதுக்கீடு!

 24.5.2021 தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமடைந்து வருகிறது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 36,000-ஐ நெருங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில், சுகாதார செலவினங்களுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கி உதவ முன் வருமாறு, கடந்த 11-ம் தேதி பொதுமக்களை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரையில் 181 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, கடந்த சில தினங்களுக்கு முன் ரூ.50 கோடி கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது, மீண்டும் 50 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் முறை மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில் சிக்கல் ஏதும் ஏற்படாமல் இருக்க, ஆர்.டி.பி.சி.ஆர் கிட்களை வாங்குவதற்காக 50 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்னதாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட தொகையில் 50 கோடி ரூபாயை, ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர்க்காக்கும் மருத்து பொருள்களை வாங்குவதற்காகவும், மேலும் 50 கோடி ரூபாயை பிற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் பெற தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காகவும் தமிழக அரசு ஒதுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் சூழலில், பொது நிவாரண நிதிக்கு உதவி வழங்க யாரும் தன்னை நேரில் வந்து பார்க்காமல், ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் உதவிடுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-cm-stalin-public-relief-fund-fifty-crores-rtpcr-kit-swab-testing-corona-306349/