19/5/2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானார். முதல்வரான பிறகு, தமிழக அரசு நிர்வாகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகளை அளித்து அனைவரும் பாராட்டும்படியான ஒரு தொடக்கத்தை மேற்கொண்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று குறித்து அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார். அதில் சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளின் சார்பில் 1 எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு எப்போது மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்று திமுகவினரிடமும் மக்களிடையேயும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 20) கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பயணம் செய்கிறார். அங்கே கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.
இதையடுத்து, கோவையில் இருந்து விமானம் மூலம் இரவு 8 மணிக்கு மதுரை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழகர்கோயில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்து தங்குகிறார். பின்னர், மே 21ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதோடு, மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை விரிவாக்கப் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு மதுரையில், அவருடைய அண்ணன் மு.க.அழகிரி பெரிய சவாலை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் தனிக்கட்சி தொடங்குவார் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணுவார் என்று பேசப்பட்ட நிலையில், தேர்தலின்போது அவர் அமைதியாகவே இருந்துவிட்டார்.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் ஒரு நேர்காணலில் மு.க.அழகிரி எனது அண்ணன் என்று கூறியிருந்தார். தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றிக்குப் பிறகு, மு.க.அழகிரி தனது தம்பிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். அதோடு, தம்பி மு.க.ஸ்டாலின் முதல்வராவதை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்திருந்தார். முதல்வர் பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் அழகிரியின் மகளும் கலந்துகொண்டனர்.
இதனால், சகோதரர்களுக்கு இடையே இருந்த அரசியல் போட்டி முடிவுக்கு வருகிறதா என்று விவாதிக்கப்பட்டது. ஆனால், கருணாநிதி உயிருடன் இருந்தபோதே, திமுகவில் இருந்து விலக்கப்பட்ட மு.க.அழகிரி இன்னும் கட்சிக்குள் சேர்ப்பதை பரிசீலிப்பதற்கான எந்த சமிக்ஞையும் தெரியவில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் மதுரை வரும்போது, தனது அண்ணன் மு.க.அழகிரியை சந்திப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மே 21ம் தேதி மதுரை வருகிற முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராசன், ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள், திமுக முக்கிய நிர்வாகிகள் வரவேற்க உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் வருகையையொட்டி, தென்மண்டல ஐஜி டி.எஸ்.அன்பு, மாநகரக் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, எஸ்பி சுஜித்குமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வருகிறது.
மதுரையில் தங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை டிவிஎஸ் நகரிலுள்ள தனது சகோதரர் மு.க.அழகிரியை சந்திக்க அதிக வாய்ப்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
“முதல்வராகப் பதவியேற்ற பின், மு.க.ஸ்டாலின் முதன்முறையாக மதுரைக்கு வருவதால், அவர் தனது சகோதரரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. ஒருவேளை முதல்வர் டிவிஎஸ் நகருக்கு செல்லும் பட்சத்தில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். இதையொட்டி டிஜிபி அல்லது கூடுதல் டிஜிபி இன்று மதுரை வர உள்ளனர்.” என்று போலீஸ் வடாரங்கள் தெரிவித்தனர்.
ஆனால், மு.க.ஸ்டாலின் தான் மாவட்டங்களுக்கு கொரோனா ஆய்வுக்காக சுறுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, திமுகவினர் தன்னை வரவேற்று கொடிகள் பதாகைகள் வைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதாவது, “கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள சேலம், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறேன்; பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால் திமுக நிர்வாகிகள் எவரையும் சந்திக்க இயலாத சூழலில் இருக்கிறேன். எனக்கு வரவேற்பு கொடுக்கும் எண்ணத்தில் திமுக கொடிகளைக் கட்டுவதையும் பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வருகை குறித்து திமுக வட்டாரங்களிடம் விசாரித்தபோது, “கொரோனா தடுப்பு ஆய்வுக்காக மதுரை வருகிற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடைய சகோதரர் மு.க.அழகிரியை சந்திக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் முதல்வவராக பதவியேற்றபின், மதுரை வருவது குறித்து, அழகிரி அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறித்தும் மு.க.அழகிரி வட்டாரத்தில் பேசியபோது, “இருவரும் சகோதரர்கள். அரசியல் பிரச்னைகள் என்றென்றைக்குமான பகையாக இருந்துவிடாது. ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். தென்மண்டலத்தில் திமுக தனது பலத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் இனியும் அழகிரியை ஒதுக்கி வைப்பது நன்றாக இருக்காது. மு.க.ஸ்டாலின், அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் பொறுப்பு வழங்குவார் இதன் மூலம் சகோதரர்களுக்கு இடையிலான சச்சரவு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-while-visit-madurai-stalin-will-meet-mk-alagiri-305108/