14.5.2021 இந்தியாவில் தினசரி கொரோன வைரஸ் தொற்று கடந்த வாரம் ஒரு உச்சத்தை தொட்ட பின்னர், தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆனாலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று (மே 13) மட்டும் 4,000க்கு மேல் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை நேற்று (மே 13) மட்டும் 3லட்சத்து 43 ஆயிரத்து 122 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் (மே 12) 3 லட்சத்து 62 ஆயிரத்து 720 ஆக இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்புகள் 4,000ஐ தாண்டி பதிவாகியுள்ளன. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த ஒருவாரத்தில் சராசரியாக மே 8ம் தேதி 3.91 லட்சம் என உச்சத்தில் இருந்தது. பின்னர், மே 12ம் தேதி 3.64 லட்சமாக குறைந்தது. அதே நேரத்தில், இந்தியாவில் தினசரி சராசரி உயிரிழப்புகள் உயர்ந்துள்ளன. தினசரி உயிரிழப்புகளின் ஏழு நாள் சராசரி செவ்வாய்க்கிழமை (மே 11) பதிவான 4,000ஐத் தாண்டி வியாழக்கிழமை 4,039 ஆக பதிவாகியிருந்தது.
இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை, உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 776 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதே போல, கடந்த 24 மணி நேரத்தில் 20 லட்சத்து 27 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 17 கோடி 92 லட்சத்து 98 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 07%ல் இருந்து கடந்த வாரம் 1.1%க்கு அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் மே 5ம் தேதி 50,112 தொற்றுகள் பதிவாகி உச்சம் தொட்ட நிலையில், தற்போது 35,297 தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே போல, டெல்லி (10,489), உத்தரப்பிரதேசம் (17,775), சத்தீஸ்கர் (9,121), மத்தியப் பிரதேசம் (8,419), பீகார் (7,752) மற்றும் தெலங்கானா (4,693) என்ற அளவில் மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் தினசரி புதிய தொற்றுகள் (30,621), மேற்கு வங்கம் (20,839) என்று ஒரே நாளில் அதிகபட்சமாக தொற்றுகளை பதிவு செய்தன. கேரளா (39,955), ஆந்திரா (22,399), ராஜஸ்தான் (15,867) பஞ்சாப் (8,494) என்ற அளவில் பதிவாகியுள்ளன. கர்நாடகாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 344 ஆக குறைந்துவிட்டன. தமிழ்நாடு 297 உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது. இது செவ்வாய்க்கிழமை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விட மிகவும் குறைவு ஆகும்.
source https://tamil.indianexpress.com/india/india-daily-covid-19-cases-falling-but-death-rate-remains-high-303079/