புதன், 11 ஆகஸ்ட், 2021

ஆக. 13 முதல் செப். 21 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்

 10 08 2021


தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டத்தொடருக்கு வருகிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார். இதையடுத்து, திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரல் விவரங்களைதமிழ்நாடு சட்டமன்ற விவகாரங்களின் செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டதொடரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை நிதிநிலை அறிக்கை அளிக்கப்பெறுதல், பொது விவாதம் மற்றும் மானியக் கோரிக்கைகளின் விவாதம் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடர் குறித்த செய்திகளை சேகரிக்க கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தரும் அனுமதி பெற்ற அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ள செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கண்டிப்பாக கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்திற்கு செல்லும் செய்தியாளர்களுக்கு நாளை 11.08.2021 புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 04.00 மணி வரை தலைமைச் செயலகத்திலும், கலைவாணர் அரங்கம் கீழ்தளத்திற்கு செல்லும் செய்தியாளர்களுக்கு 11.08.2021 புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 04.00 மணி வரை சென்னை கலைவாணர் அரங்கத்திலும் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைவாணர் அரங்கத்தில் கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்பவர்கள் இரண்டு ஸ்டாம்ப் சைஸ் அளவு புகைப்படங்களை எடுத்து வர கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-budget-session-start-on-august-13th-covid-19-test-compulsory-to-all-331193/