09 08 2021
White paper on Tamil Nadu Government’s finances : தமிழகத்தின் முதல் இ-பட்ஜெட் மற்றும் திமுக அரசின் முதல் பட்ஜெட் வருகின்ற 14ம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதாக தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 11:30 மணி அளவில் 120 பக்கங்கள் கொண்ட இந்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.
அமைச்சர் பேச்சு
வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான் தான் பொறுப்பு என்று பொறுப்பேற்றுக் கொண்ட நிதி அமைச்சர் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பிறகு தான் தமிழகத்தில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளிப்படைத் தன்மை கொண்டு செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
அரசின் வருமானம் குறைந்துள்ளது
தமிழக அரசின் வருமானம் குறைந்துள்ளது. 2020 – 21 இடைக்காலத்தில் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ. 61,320 கோடியாக உள்ளது. அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் நிலவி இருந்தது. எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவு தமிழகத்தின் வருமானம் குறைந்து, கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ. 1,50,000 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2,63,976 ரூபாய் கடன் உள்ளது
நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது
வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசின் வருவாய் 4-ல் ஒரு பங்கு குறைந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையே ரூ. 1.50 லட்சம் கோடியாக இருந்ததால் நிதி பற்றாக்குறை பல மடங்கு அதிகரித்துவிட்டது. தமிழக அரசின் தற்போதைய கடன் ரூ. 5,70.189 கோடியாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரம் ஏற்கனவே சரிவை கண்டிருந்த நிலையில் கொரோனா செலவும் சேர்ந்தது நிதி நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை குறித்த கணக்கு சரியாக பராமரிக்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
பொதுத்துறை வாங்கிய கடன்கள்
மாநில அரசின் வரி வருவாய் படிப்படியாக குறைந்து வருகிறது. அதிமுக அரசால் அளிக்கப்பட்ட கடன் உத்திரவாதத்தில் 90% மின்வாரியத்திற்கும் 5% போக்குவரத்திற்கும் அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் வருவாய் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் பாதி அளவு கூட வரி வருவாய் இல்லை. கடைசி 5 ஆண்டில் பொதுக்கடன் ரூ. 3 லட்சம் கோடியாக உள்ளது. மின்சாரத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தைக் காட்டிலும் பீகாரின் மின்வாரியம் நல்ல நிலையில் உள்ளது.
வாகன வரி
கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் வாகன வரி குறைவாகவே வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வாகன வரி மாற்றம் செய்யப்படவில்லை
நஷ்டத்தில் உள்ளது போக்குவரத்து துறை
ஒரு கிலோ மீட்டருக்கு பேருந்து ஓடினால் ரூ. 59.15க்கு போக்குவரத்து துறையில் நஷ்டமே ஏற்படுகிறது. இந்த நிலை மகளிர் மற்றும் பாலின சிறுபான்மையினருக்கு இலவச போக்குவரத்து திட்டம் கொண்டு வருவதற்கு முன்பிருந்தே உள்ளது. அதே போன்று உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் மின்சார கட்டண பாக்கியாக ரூ. 1,743 கோடியை வைத்துள்ளது என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் அமைச்சர்.