09 08 2021
தமிழக அரசு இன்று வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாக நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடன் வாங்கினோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பேரூராட்சி பகுதியில் அதிமுக சார்பில், கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, பயனாளிகளுக்கு அரிசி, காய்கறிகள், கிருமிநாசினி, முகக் கவசம் உள்ளிட்டவை அடங்கிய கரோனா நிவாரண தொகுப்பினை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்து, திமுக அரசு வெளியிட உள்ள வெள்ளை அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கெள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், “2011ம் ஆண்டு திமுக ஆட்சி தோல்வியடைந்தபோது, 1 லட்சத்து 14 ஆயிரம் கோடி கடனில் விட்டுவிட்டுத்தான் சென்றார்கள். அந்த கடனில்தான் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். ஆகவே அப்போதே கடனில் விட்டுச் சென்றார்கள். படிப்படியாக கடன் தொகை அதிகரித்து வந்தது. இருந்தாலும் நாம் பெறுகின்ற கடன் வளர்சித் திட்டங்களுக்கானது. அதுமட்டுமல்லாமல், அந்த கடனில் பாதிக்கு மேல் மூலதனமாக உள்ளன. ஒரு மாநிலம் வளர்ச்சி அடைய வெண்டும் என்றால் அதற்கான திட்டங்களை நிறைவேற்ற தேவையான கடன் பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இதில் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களிலுமே கடன் பெற்றுதான் வளர்ச்சி பணியை நடத்திக்க்கொண்டிருக்கிறார்கள். செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பெற்ற கடன்கள் அவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதனடிப்படையில்தான் திமுகவும் கடன் பெற்றிருந்தது.
கேள்வி: மின்வாரியம் உள்ளாட்சி ஆகியவற்றி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்களே?
உங்களுக்கு நன்றாகத் தெரியும். இன்னும் மின் கட்டணம் உயர்த்தவில்லை. ஆனால், மின் சாதானங்களின் விலை உயர்ந்துவிட்டது. சம்பளமும் உயர்ந்துவிட்டது. எரிபொருள் விலை உயர்ந்துவிட்டது. அனல் மின்சாரம் என்றால், நிலக்கரியின் விலை, நிலக்கரியைக் கொண்டுவருவதற்கான டிரான்ஸ்போர்ட் செலவு எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று பாருங்கள். ஆயில் எவ்வளவு உயர்ந்திருக்கிறது பாருங்கள். ஏனென்றால், ஆயில் டிரான்ஸ்பாரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்படி பல வகையிலும் மின் சாதனங்களின் விலை உயர்வின் காரணமாக, நாம் மின் கட்டணத்தின் விலையை உயர்த்தாத காரணத்தினாலே, அதிலே நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. திமுக ஆட்சியிலும் அந்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்துக் கழகத்திலும் அதே மாதிரிதான். இன்றைக்கு கட்டணத்தை டீசல் விலை ஏற்றத்திற்கு ஏற்றாற்போல உயர்த்தி இருந்தால் பரவா இல்லை. எந்த அளவுக்கு டீசல் விலை உயர்ந்திருக்கிறது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். என்று கூறினார்.
வெள்ளை அறிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்வி பதிலளித்து தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது திமுகவினர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை பெரும்பகுதி நிறைவேற்ற தவறிவிட்டது. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைப்பு போன்ற பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறி விட்டது. இதனை மக்கள் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் அண்மையில் அதிமுகவினர் மாநில அளவிலான, பெரிய தொரு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நடத்தி இருக்கிறோம் என்று சுட்டிக்காட்டினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/edappadi-k-palaniswami-press-meet-on-white-paper-we-borrowed-for-development-of-state-330879/