01 08 2021
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்திற்கான தலைவராக இந்தியா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றது. மேலும், இந்தியா கடல் பாதுகாப்பு, அமைதி காத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் முக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய உள்ளது.
“நம்முடைய 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே மாதத்தில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்குவது நமக்கு ஒரு தனி மரியாதை” என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி சனிக்கிழமை ஒரு வீடியோ செய்தியில் கூறினார். மேலும், அவர், “ஆகஸ்ட் 1ம் தேதி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றது. இந்தியாவும் பிரான்சும் வரலாற்று மற்றும் நெருங்கிய உறவுகளை அனுபவிக்கின்றன. பாதுகாப்பு கவுன்சிலில் நாங்கள் பணியாற்றிய போது பிரான்ஸ் நமக்கு அளித்த அனைத்து ஆதரவிற்கும் நான் நன்றி கூறுகிறேன்” என்று கூறினார்.
இந்தியா அதனுடைய புதிய பங்களிப்பின் ஒரு பகுதியாக, ஐ.நா அமைப்பின் இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி நிரலை இந்தியா தீர்மானிக்கும். மேலும், ஐ.நா.வில் பல்வேறு பிரச்சினைகளில் முக்கியமான கூட்டங்களை ஒருங்கிணைக்கும். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தனது நிகழ்ச்சி நிரலில் சிரியா, ஈராக், சோமாலியா, ஏமன் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட பல முக்கிய கூட்டங்களைக் கொண்டிருக்கும். லெபனானில் சோமாலியா, மாலி மற்றும் ஐ.நா. இடைக்காலப் படைகள் பற்றிய முக்கியமான தீர்மானங்களையும் பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொள்ளும்” என்று டி.எஸ் திருமூர்த்தி கூறினார்.
இந்தியாவின் வெளிவிவகாரங்கள் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ட்விட்டரில் இந்த நிகழ்வை நினைவு கூர்ந்து, இந்தியா எப்பொழுதும் நடுநிலையின் குரலாகவும், உரையாடலின் சர்வதேச சட்டத்தின் ஆதரவாளராகவும் இருக்கும்” என்று கூறினார்.
கடல்சார் பாதுகாப்பு, அமைதி காத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிககி தவிர, இந்தியா அமைதிப்படை வீரர்களின் நினைவாக ஒரு மரியாதை செய்யும் நிகழ்வையும் ஏற்பாடு செய்யும்.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி சையத் அக்பருதீன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியாக இருப்பார் என்று கூறினார்.
மேலும், சையத் அக்பருதீன் கூறுகையில், “75 ஆண்டுகளில், நம்முடைய அரசியல் தலைமை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் நிகழ்வுக்கு தலைமை தாங்குவது இதுவே முதல் முறை. நமது தலைமை முன்னணியில் இருந்து வழிநடத்த விரும்புகிறது என்பதை இது காட்டுகிறது. இந்தியாவும் அதன் அரசியல் தலைமையும் நமது வெளியுறவுக் கொள்கை முதலீடுகளில் செய்யப்பட்டுள்ளன என்பதையும் இது காட்டுகிறது. இது ஒரு வெர்ச்சுவல் சந்திப்பு என்றாலும், நமக்கு இது முதல் சந்திப்பாகும். எனவே, இது வரலாற்று சிறப்புமிக்கது. இந்த முயற்சியில் கடைசியாக ஈடுபட்ட இந்தியப் பிரதமர் 1992ல் பிரதமராக இருந்த பிவி நரசிம்மராவ்தான். அவர், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்” என்று கூறினார்.
இந்தியா தலைமை பொறுப்பேற்பதற்கு முன்னதாக, பாகிஸ்தான் சனிக்கிழமை அன்று புதுடெல்லி சர்வதேச சட்டங்களையும் விதிமுறைகளையும் பின்பற்றும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியது. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பதவியின் நடத்தையை நிர்வகிக்கும் தொடர்புடைய விதிகள் மற்றும் விதிமுறைகளை இந்தியா பின்பற்றும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலக செய்தி தொடர்பாளர் கூறினார்.
இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக 2021-22 உள்ள காலத்தில் இந்தியா முதல்முறையாக தலைமை பதவி வகிக்க உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தனது இரண்டு ஆண்டு காலத்தை இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி தொடங்கியது.
source https://tamil.indianexpress.com/india/india-takes-over-unsc-presidency-for-august-328124/