14 08 2021
All Caste People Priests In Hindu Temple : அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திமுகவின் கொள்கையை நிறைவேற்றும் விதமாக முதல்வர் ஸ்டாலின் பிராமணர் அல்லாத பிற சாதியைச் சேர்ந்த 24 அர்ச்சகர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள இந்து கோவில்களில் பணியாற்றுவதற்கான நியமன ஆணைகளை வழங்கினார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றிய திமுக, தமிழகத்தில் பல அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக இந்து அறநிலையத்துறையில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் திமுக அரசு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது போன்ற நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்து கோவில்களில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் முதற்கட்டமாக அர்ச்சர்கர் பயிற்சி முடித்த 24 பேருக்கு அர்ச்சகராக பணி நியமனம் செய்யும் ஆணையை வழங்கினார். இவர்கள் அனைவரும், சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் உட்பட தமிழகம் முழுவதும் பல கோவில்களில் பணியாற்ற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக அரசின் இந்த நடவடிக்கை இது இந்து மதக் குருத்துவத்தை பிராமணர்களின் பாதுகாப்பிலிருந்து விடுவிப்பதற்கான திராவிடக் கனவின் முதற்படியாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றும் கலைஞரின் கனவை நனவாக்கும்வண்ணம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையின்கீழ் முறையாகப் பயிற்சிபெற்ற 24 அர்ச்சகர்களுக்கு மயிலை கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்வில் பணிநியமன ஆணைகளை வழங்கினேன் என்று குறிப்பட்டுள்ளார்.
1970 -ல் அப்போதைய முதல்வராக இருந்தவரும் தற்போதைய முதல்வர் ஸ்டாலினின் தந்தையுமான மு.கருணாநிதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். ஆனால் இந்த சட்டத்தை கொண்டு வந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு பின்னடைவை சந்தித்தது. மேலும் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து 2006 ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுகவில் முதல்வர் கருணாநிதி மீண்டும் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தார்.
இது தொடர்பாக ஏறக்குறைய ஒரு தசாப்த காலத்திற்கு பிறகு, உச்சநீதிமன்றம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு அனுமதி அளித்தது. ஆனால் பணி நியமனம் செய்யும்போது அவர் அர்ச்சகராக பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே இந்த நியமனம் செல்லுபடியாகும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்பிறகு 2 முறை ஆட்சியை இழந்த திமுக தற்போது மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை தற்போது செயல்படுத்தியுள்ளது.
பிராமணர் அல்லாத பிற சாதியினரும் தமிழகத்தில் புகழ்பெற்ற இந்து கோவில்களின் கருவறைக்குள் சடங்குகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 207-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் அரசுப் பள்ளிகளில் பயிற்சியளிக்கப்பட்டனர். இதில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மதுரையில் உள்ள மாரிச்சாமி என்பவர் ஒரு கோவிலுக்கு அர்ச்சகராக நியமிக்ப்பட்து முதல் அரசு பயிற்சி பெற்ற பிராமணரல்லாத அர்ச்சகர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாநில அரசு இத்திட்டத்திற்கான புதிய இயக்கத்தை இன்று தொடங்கியுள்ள நிலையில், வரும் மாதங்களில் அதிக பிராமணர் அல்லாத அர்சாகள் நியமனங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-cm-stalin-appointed-non-brahmin-priests-in-hindu-temples-332534/