14 08 2021
மதுரை ஆதீனம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 77.
மதுரை ஆதீனத்தின் 292ஆவது குருமகா சந்நிதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். 77 வயதான மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மதுரை மதுரை கே.கே.நகா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மதுரை ஆதீனத்திற்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், மதுரை ஆதீனம் இன்று (ஆகஸ்ட் 13) இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவு பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த மதுரை ஆதீனம் அவ்வப்போது அரசியல் கருத்துகளைப் பேசி கவனத்தைப் பெற்றவர். மத நல்லிணக்கத்துக்கு மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் செயலை பலரும் பாராட்டியுள்ளனர். மதுரை ஆதீனத்திற்குரிய 3 கோயில்கள் தஞசாவூர், திருவாரூரில் உள்ளன. தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்றாகும்.
மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், “ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.