இந்தியாவில் மானியமில்லாத எல்.பி.ஜி சிலிண்டர்களின் விலையை இந்தியாவின் முக்கிய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் இன்று ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மானியமில்லாத 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை இப்போது சென்னையில் ரூ.900.50 ஆகவும் டெல்லியில் ரூ.884.50 ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை இரண்டு வாரங்களுக்கு பிறகு தொடர்ச்சியாக 2வது முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக, எல்.பி.ஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15ம் தேதிகளில் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்படுகிறது.
இன்றைய விலை உயர்வுக்கு முன், மானியம் இல்லாத எல்.பி.ஜி சிலிண்டரின் விலை ஆகஸ்ட் 18, 2021 அன்று ரூ.25 உயர்த்தப்பட்டது. அதற்கு முன், ஜூலை 1, 2021 அன்று சிலிண்டருக்கு ரூ.25.50 உயர்த்தப்பட்டது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் டேட்டா இணையதளம் குறிப்பிடுகிறது.
இது மட்டுமில்லாமல், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டரின் விலையும் ரூ.75 உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது ஒரு வணிக சிலிண்டரின் விலை ரூ.1,693 செலவாகும் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய மாற்றத்தின் படி, சிலிண்டர் விலை கொல்கத்தாவில் ரூ.911 ஆகவும், மும்பையில் ரூ.884.50 ஆகவும், சென்னையில் ரூ.900.50 ஆகவும் உள்ளது. சென்னையில் இதற்கு முன்னர் மானியம் இல்லாத சிலிண்டரின் விலை ரூ.875.50 ஆக இருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 1 முதல் இப்போது செப்டம்பர் 1, தேதி வரையில் மட்டும் மானியம் இல்லாத எல்.பி.ஜி சிலிண்டர் விலை மொத்தம் 190 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/business/lpg-cylinder-prices-hiked-how-much-it-will-cost-now-in-tamilnadu-337793/