தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் 5 மாதங்களாக சம்பளம் அளிக்கப்படாததால் தங்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சுமார் 4,000 கௌரவ விரிவுரையாளர்கள் ரூ.20,000 தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறார்கள். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அரசு கல்லூரி மாணவர்களின் கற்றல் பணி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆண்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி கற்பித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் 5 மாதங்களாக அரசு சம்பளம் தராததால் அவர்கள் தங்களுடைய அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக தராமல் நிறுத்தி வைத்துள்ள சம்பளத்தை தருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கும் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளருக்கும் மின்னஞ்சல் வழியாக மனு அளித்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பளம் இல்லாத பிரச்னை மட்டுமல்ல, பணி நிரந்தரம் இல்லாமல், 40-45 வயதைக் கடந்த கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்க்கையின் விரக்தியில் உள்ளதாகவும் தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், தமிழக அரசு இதுவரை அவர்களுக்கு எந்த பதிலையும் உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.
கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களுக்கு 5 மாதங்களாக அரசு சம்பளம் வழங்கப்படாதது குறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ முன்னேற்ற சங்கத்தின் மாநில ஆலோசகர் முனைவர் சே.சோ.இராமஜெயம் உடன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் இருந்து பேசினோம். சே.சோ.இராமஜெயம் கூறியதாவது: “கடந்த 5 மாதங்களாக அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு தமிழக அரசு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை. கடந்த 2020ம் ஆண்டு இதே போன்ற கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலம்தான் நிலவியது. ஆனால், எங்களுக்கு சம்பளம் கொடுத்தார்கள். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் நாங்கள் கடைசியாக மார்ச், 2021ல் சம்பளம் வாங்கினோம். ஆனால், ஏப்ரல் மாதம் வரை, கல்லூரிகளில் நாங்கள் நேரடி வகுப்பு நடத்தினோம். 2020ம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தாமதமாக கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், அவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிப்பதற்காக அவர்களுக்கு கௌரவ விரிவுரையாளர்கள் மே மாதமும் பாடம் நடத்தினோம்.
வழக்கமாக சாதாரணமான காலத்தில் தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 18ம் தேதிதான் கல்லூரி மீண்டும் திறக்கப்படும். இந்த கொரோனா பேரிடர் காலத்தில் தாமதமாக கல்லூரி திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எங்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் இல்லை. ஏப்ரல் மாதம் முதல் இப்போது வரை எங்களுக்கு சம்பளம் இல்லை. அரசு கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படாத வண்ணம், தமிழக அரசின் உத்தரவுப்படி நாங்கள் ஆகஸ்ட் 9ம் தேதி முதலே நாங்கள் கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
அதற்கு பிறகு, இப்போது புதியதாக போடப்பட்ட உத்தரவுப்படி செப்டம்பர் 1 முதல் கல்லூரி மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வருகிறார்கள். கௌரவ விரிவுரையாளர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று வகுப்பு எடுக்கிறோம். இந்த மாதிரி சூழலில் எங்களுக்கு 5 மாதம் சம்பளம் இல்லாமல் இருக்கிறோம். கௌரவ விரிவுரையாளர்கள் எம்.ஏ., எம்.காம், எம்.எஸ்சி, எம்பில், பி.எச்டி படித்திருக்கிறோம். நெட், ஸ்லெட் போன்ற தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறோம். இப்படி உயர்கல்வி படித்துள்ள கௌரவ விரிவுரையாளர்கள் தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4,500 பேர் வேலை பார்க்கிறார்கள். அதில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உதவிப் பேராசிரியர்களுக்கு கூறியுள்ள உரிய தகுதியுடன் வேலை செய்பவர்கள் 2,500க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்கிறார்கள்.
இந்த அடிப்படையில், கடந்த காலங்களில் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் வழியாக கல்லூரி முதல்வருக்கு உத்தரவு பிறப்பிப்பார்கள். ஒவ்வொரு கல்வி ஆண்டு ஜூன் மாத துவக்கத்தில் கல்லூரி திறந்தால், ஜூன் மாத முதல் வாரத்திலோ அல்லது ஜூன் இறுதியிலோ எங்களுக்கு ரிடெய்னிங் ஆர்டர் கொடுப்பார்கள். உடனடியாக அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து எங்களுக்கு சம்பளம் ஒதுக்கீடு செய்து சம்பளத்தை உயர்த்துவார்கள். இது கடந்த காலங்களில் நடைமுறையாக இருந்தது. ஆனால், இப்போது, இந்த அரசாங்கம் எங்களைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் செலுத்தவில்லை. கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரும் வஞ்சிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்.” என்று கூறினார்.
தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் தமிழக அரசிடம் என்ன விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முனைவர் சே.சோ.இராமஜெயம் கூறியதாவது:
இந்த கொரோனா பேரிடர் காலத்தில், கல்வி சார்ந்த பணிகள், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான பணிகளை நாங்கள் தொடர்ந்து கல்லூரி வளாகத்திற்கே வந்து கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உரிய வேலைகளை செய்து உதவி வருகிறோம்.
வேலூரில் உள்ள திருவள்ளூர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகள், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் கடந்த 2020ம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை கொரோனா பேரிடர் காரணமாக தாமதமாக நடைபெற்றதால், அந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடிக்காத சூழலில் நாங்கள் இந்த ஆண்டு மே வரைக்கும் பாடத்தை நடத்தி அவர்களுக்கு உடனடியாக இணைய வழியில் தேர்வுகளை நடத்தி அந்த மாணவர்களுக்கு விடைத்தாளை திருத்தி மதிப்பீடு செய்து பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்தோம். அந்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதனால், மே மாதம் நாங்கள் கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அதனால், ஏப்ரல் மாதம் தொடங்கி இன்று வரை நாங்கள் ஊதியம் இன்றி, வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் 4,500க்கு மேற்பட்ட தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நிலை பரிதாபகரமாக உள்ளது. அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு பரிசீலனை செய்து, உயர்கல்வித் துறை அமைச்சர், உயர் கல்வித்துறை செயலாளர் தலையிட்டு அவர்களுக்கு உடனடியாக 5 மாதம் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து ஏற்கெனவே உயர்கல்வித் துறை செயலாளருக்கு கடிதம் வாயிலாக மனு கொடுத்திருக்கிறோம். அடுத்து மின்னஞ்சல் மூலமாக மனு அனுப்பியிருக்கிறோம். தலைமைச் செயலாளருக்கு மின்னஞ்சல் வழியாக மனு அனுப்பியிருக்கிறோம்.
இது மட்டுமில்லாமல், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசாணை 56 பிறப்பித்து அதன் வழியாக ஒரு குழுவை நியமித்து அந்த குழுவின் வாயிலாக தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் நீண்ட காலமாக தகுதியுடன் பணி புரிந்து வந்திருக்கக்கூடிய கௌரவ விரிவுரையாளர்கலை பணி நிரந்தரம் செய்வதற்காக கடந்த அதிமுக அரசு ஒரு முன்னெடுப்பை எடுத்தது. அதற்கு 2021ல் பிப்ரவரி மாதம், 2 2 நாட்கள் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடந்தது. அதற்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், சான்றி சரிபார்ப்புக்கு பிறகு, அவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அந்த சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு நடந்த, அத்தனை பணிகளையும் இந்த அரசு முடுக்கிவிடாமல் தாமதித்து வருகிறது. அதாவது முதல் கட்டமாக, தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்ளை முறைப்படுத்த 1,146 பணி இடங்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு உத்தரவு போட்டார்கள். அதற்காகத்தான் அரசாணை 56 பிறப்பிக்கப்பட்டது. அதற்காக ஒரு குழு நியமித்தார்கள். அந்த குழுவில் யார் யார் இருந்தார்கள், என்றால், கல்லூரிக் கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து ஒரு உறுப்பினர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் 3 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்தக் குழுவுக்கு உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைவராக இருந்தார். இந்த குழு மூலமாகத்தான் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் பணிபுரியும் யுஜிசி அறிவித்துள்ள கல்வித்தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்களுக்கு கல்லூரி முதல்வர் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு சான்றி சரிபார்ப்பு பணி சென்னை தரமணியில் உள்ள 2021 பிப்ரவரியில் நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதி அமலுக்குவந்ததால் அந்த பணி தொய்வடைந்தது. தேர்தல் முடிந்த பிறகும், அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, உயர்கல்வித் துறை அமைச்சர் ஊடகங்களில் பொதுவில் கூறுகையில், கடந்த ஆட்சியில் கௌரவ விரிவுரையாளர்கள் விவகாரத்தில் நிறைய முறைகேடுகள் இருக்கிறது. கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஒரு குழு அமைத்தார்கள். அந்த குழு பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுத்ததாக தெரியவந்துள்ளது. எனவே அந்த குழுவை நாங்கள் கலைத்துவிட்டு ஒரு முறையான பணி நியமனத்தை செய்ய தேர்வு வாரியம் வழியாக செய்ய வேண்டும். அதாவது ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் வழியாகத்தான் நடத்துவோம் என்று அவர் கூறியுள்ளார். அதனால், தமிழக அரசு தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் பணி புரியும் தகுதியுள்ள கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைக்கு இதுவரை அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.” என்று கூறினார்.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று மாதம் ரூ.15,000ஆக இருந்த ஊதியத்தை கடந்த ஆட்சியில் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கினார்கள். ஆனால், தற்போது, தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ விரிவுரையாளர்கள் 5 மாதங்களாக சம்பளம் இல்லாமல் வறுமையில் வேதனைப்படுவதாகக் கூறுகிறார்கள். எம்.ஏ, எம்.காம், பி.எச்டி படித்துவிட்டு தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுவிட்டு ஊதியம் இலாமல் தங்களுடைய தங்களின் குடும்பத்தின் அடிப்படை தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத பரிதாப நிலையில் உள்ளதாக வருத்தப்படுகிறார்கள். அதனால், தமிழக அரசு உடனடியாக அவர்களுக்கு ஊதியத்தை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். தமிழக அரசு 5 மாதங்களாக சம்பளம் இல்லாமல் தத்தளிக்கும் தங்கள் மீது கவனத்தை திருப்பாதா? தற்போது நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலாவது தங்களைப் பற்றி விவாதித்து ஒரு விடியல் கிடைக்காதா என்று 4,500 கௌரவ விரிவுரையாளர்களும் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தமிழக அரசு விரைந்து கௌரவ விரிவுரையாளர்களின் துயர் துடைக்குமா?
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-govt-arts-and-science-college-guest-lecturers-salary-issue-and-their-demands-339333/