கடந்த ஆண்டு, கனரக தொழில்களுக்கான மத்திய அமைச்சகம் கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருச்சி, விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கான 525 இ-பஸ்களை (எலக்ட்ரிக் பஸ் – மின்சார பேருந்து) மத்திய அரசின் இரண்டாம் கட்ட விரைவான தத்தெடுப்பு மற்றும் மின்சார வாகன உற்பத்தி (FAME – ஃபேம்) திட்டத்தின் கீழ் அனுமதித்தது. மேலும், இந்த திட்டத்தின் கீழ், பேருந்தின் நீளம் மற்றும் வாகனங்கள் செல்ல தேவையான உள்கட்டமைப்பை சார்ந்து ஒரு பேருந்துக்கு ரூ .35 லட்சம் முதல் ரூ. 55 லட்சம் வரை மானியம் வழங்குவதாக மத்திய அமைச்சகம் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், மற்ற தென் மாநிலங்களைப் போலவே, தமிழகமும் புதிய மின்சார பேருந்துகளை வாங்கும் திட்டத்தை அமைதியாக கைவிட்டுள்ளது. இது குறித்து பேசியுள்ள மூத்த போக்குவரத்துத் துறை அதிகாரி, “மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை எலக்ட்ரிக் பேருந்தின் விலைக்கு ஏற்றதாக இல்லை” என்றுள்ளார்.
மேலும், “12 மீட்டர் நீளமுள்ள ஒரு இ-பேருந்துக்கு குறைந்தபட்சம் ரூ.1.2 கோடி வரை செலவாகும். அவற்றின் ஆரம்ப மதிப்பீடுகள் அரசுக்கு 20 கிலோ மீட்டருக்கு அதிகமான இழப்பை ஏற்படுத்தும்.பேட்டரி மாற்றும் செலவு குறித்து மத்திய அரசு தெளிவாக குறிப்பிடவில்லை. எனவே, டெண்டர்களை ரத்து செய்வதைத் தவிர தமிழகத்திற்கு வேறு வழியில்லை” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திலிருந்து தமிழகம் உட்பட பல மாநிலங்கள் விலகி இருப்பதற்கு மற்றொரு காரணமாக ‘போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் கடுமையான எதிர்ப்பு’ என்று கூறப்படுகிறது. அரசு நடத்தும் போக்குவரத்து நிறுவனங்கள் (எஸ்.டி.யு) இந்த திட்டத்தில் நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது என்றும், வளர்ந்து வரும் இந்த தொழில்நுட்பத்தில் மாநில அரசுகள் அதிக முதலீடு செய்வதை மத்திய அரசு ஊக்கப்படுத்த முனைப்பு காட்டும் விதமாக திட்டம் வகுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, அரசு நடத்தும் போக்குவரத்து நிறுவனங்கள் வெற்றிகரமான ஏலதாரருடன் (தனியார் இ-பஸ் ஆபரேட்டர்) மொத்த செலவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும், தனியார் இ-பஸ் ஆபரேட்டர்கள் அவர்களை தங்களது ஊழியர்களுடன் அரசு வழித்தடங்களில் இயக்குவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற காரணங்களால் இந்த திட்டத்தில் இருந்து தமிழகம் பின் வாங்கி வரும் நிலையில், இ-பேருந்துகளை கொள்முதல் செய்யும் திட்டத்திற்காக இதுவரை 5 முறை டெண்டருக்கு சென்ற கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு திட்டம் சாத்தியமற்ற ஒன்றாக தென்பட துவங்கியுள்ளது.
இது ஒரு புறமிருக்க, சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு 500 பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களை ஜெர்மன் நிதியுதவி (KfW வங்கி) வாங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. 80:20 அடிப்படையில் ஒவ்வொரு பேருந்தின் செலவும் பகிர்ந்து கொள்ளப்பட உள்ள இந்த திட்டத்திற்கான டெண்டர் முன்மொழிவு கோரிக்கையைத் தயாரிக்க அரசு இரண்டு ஆலோசகர்களை நியமித்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இந்த திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-in-tamil-tn-to-not-procure-525-new-electric-buses-tamil-news-338610/