வெள்ளி, 17 செப்டம்பர், 2021

ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மீண்டும் புதிய தலைமைச்செயலக கல்வெட்டு

 15 09 2021 

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் மீண்டும் புதிய தலைமைச்செயலக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சட்டமன்றம் மற்றும் தலைமைச்செயலகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலும், தலைமைச்செயலகத்தின் பிற அரசு துறை அலுவலகங்கள் நாமக்கல் கவிஞர் மாளிகையிலும் செயல்பட்டு வருகிறது.

இதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை தவிர்க்கும் பொருட்டு, சட்டமன்றம் மற்றும் தலைமைச்செயலகம் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச்செயலகம், 2010 ஆம் ஆண்டு, அப்போதைய திமுக அரசால் கட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அழைத்து வந்து புதிய தலைமைச்செயலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்ட இந்த தலைமைச்செயலகம், 2011 தேர்தலுக்குப் பிறகான ஆட்சி மாற்றத்தில் கைவிடப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தலைமைச்செயலகம் மீண்டும் ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலே செயல்படும் என அறிவித்தார். மேலும், ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதாகவும் அறிவித்தார்.

இதனையடுத்து, புதிய தலைமைச்செயலகம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. மேலும் அப்போது, புதிய தலைமைச்செயலக அடிக்கல் நாட்டு விழாவின் போது வைக்கப்பட்ட கல்வெட்டும் நீக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில், தலைமைச்செயலக அடிக்கல் நாட்டு விழாவின் போது வைக்கப்பட்ட கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தலைமைச்செயலகம் மாற்றபடுகிறதா? அல்லது கல்வெட்டு மட்டும் மீண்டும் வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதுவரை அரசு தரப்பில் கல்வெட்டு மீண்டும் வைக்கப்பட்டது குறித்து எந்த தகவலும் வரவில்லை.

source https://tamil.indianexpress.com/tamilnadu/new-secretariat-inscription-again-at-omandurar-multipurpose-hospital-341927/