வெள்ளி, 17 செப்டம்பர், 2021

வசதி வேண்டுமா… பணம் கொடுங்கள்!’ டோல்கேட் கட்டண கேள்விக்கு நிதின் கட்கரி அதிரடி பதில்

 

தரமான சேவை, நல்ல சாலை போன்ற வசதிகளைப் பெற விரும்பினால் மக்கள் பணம் செலுத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம், விரைவு நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது பயண கட்டணத்தை அதிகரிக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், “நீங்கள் ஏசி வசதி கொண்ட அறையை உபயோகிக்க விரும்பினால் பணம் செலுத்த தான் வேண்டும். இல்லையெனில், நீங்கள் காலி மைதானத்தில் திருமணத்தை ஏற்பாடு செய்யலாம்” என்றார்.

குறையும் பயண நேரம்

மேலும், ஹரியானாவில் டெல்லி-மும்பை விரைவுசாலையின் சோஹ்னா பகுதியை கட்கரி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, ” தரமான விரைவுச்சாலை பயண நேரத்தை கணிசமாகக் குறைப்பதால், பயணங்களுக்கான எரிபொருள் உபயோகமும் குறைகிறது. டெல்லி-மும்பை விரைவுச்சாலை பயண நேரத்தை 12 மணி நேரமாக குறைந்துள்ளது. டெல்லியிலிருந்து ஒரு டிரக் மும்பையை அடைய 48 மணி நேரம் ஆகும். ஆனால் அதிவேக நெடுஞ்சாலையில், 18 மணிநேரம் மட்டுமே எடுக்கும். எனவே, அந்த டிரக்கால் அதிக பயணங்களை மேற்கொள்ள முடியும், வியாபாரமும் பெருகும்.

ஆறு மாநிலங்கள் வழியே அமையவுள்ள இந்த 1,380 கிமீ நீளமுள்ள எட்டு வழி விரைவுச்சாலை பணிகள் 2023 ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது . எதிர்காலத்தில் விரைவு சாலை வழியாக ட்ரோன்களை பயன்படுத்தவும், மக்கள் மற்றும் சரக்குகளுக்காக ஹெலிபேட்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இந்த புதிய விரைவு சாலை மூலம், டெல்லியிலிருந்து கட்ராவுக்கு ஆறு மணி நேரத்திலும், டெல்லியில் இருந்து சண்டிகருக்கு இரண்டு மணி நேரத்திலும், டெல்லியில் இருந்து அமிர்தசரஸூக்கு நான்கு மணி நேரத்திலும், டெல்லியிலிருந்து டேராடூனுக்கு இரண்டு மணிநேரத்திலும் சென்றுவிட முடியும்.

தற்போது, டெல்லி-மீரட் விரைவு சாலை பகுதிவாரியாகத் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிடும். நான் தான் அதைத் அடுத்த மாதம் திறக்கப் போகிறேன். 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விரைவு சாலை காரணமாக, டெல்லி- மீரட் இடையிலான பயண நேரம் 40 நிமிடங்களாகக் குறைகிறது” என்றார்.

12 வழிச்சாலையாக மாறலாம்

தொடர்ந்து பேசிய NHAI உறுப்பினர் மனோஜ்குமார், ” தற்போது டெல்லி-மும்பை நெடுஞ்சாலை எட்டு வழிச்சாலையாக உள்ளது. ஆனால், அதிலிருக்கும் மிடியன் 21 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளன. இது சராசரி அளவை விட அகலமானது.

வரும் காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில், இச்சாலை 12 வழிச்சாலையாக மாற்றப்படும். ஜனவரி 2023க்குள் விரைவுசாலையை முழுமையாகத் திறக்கவுள்ளோம் . தற்போது, மொத்த நீளத்தின் 1,200 கிலோமீட்டரில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.

ரூ .98,000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இச்சாலை, இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலையாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த சாலை டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா , ஜெய்ப்பூர் மாநிலங்கள் வழியாக அமைக்கப்படவுள்ளது. மேலும், கிஷன்கர், அஜ்மீர், கோட்டா, சித்தோர்கர், உதய்பூர், போபால், உஜ்ஜைன், இந்தூர், அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத் போன்ற பொருளாதார மையங்களையும் இணைக்கிறது.

வன விலங்குகளின் நடமாட்டத்தைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும் வகையில் ஆசியாவிலேயே முதன்முறையாக இம்மாதிரியான விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகிலேயே இதுபோன்று ஒரு விரைவுச் சாலை தான் உள்ளது என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மொத்தமாக இரண்டு எட்டு வழி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் இருக்கும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வகையில் முக்குந்திரா சரணாலயத்தில் ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று மதேரன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு மார்ச் 9, 2019 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/india/nitin-gatkari-about-toll-on-highways/