கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல்துறையினர் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் மேல் விசாரணைக்கு தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல்துறையினர் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி இந்த வழக்கில் காவல்துறை சாட்சியாக உள்ள கோவையை சேர்ந்த அனுபவ் ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோடநாடு வழக்கில், ஏற்கெனவே 41 காவல்துறை சாட்சிகள் விசாரித்து முடிக்கப்பட்டு, குற்றவாளியிடம் குறுக்கு விசாரணையும் முடிக்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், மீண்டும் தன்னிடம் காவல்துறையினர் மறுவிசாரணை நடத்தி வருகிறார்கள். இது சட்டத்துக்கு புறம்பானது, காவல்துறையினரின் மறுவிசாரணையில் உள்நோக்கம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், இந்த வழக்கில் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் அனுபவ் ரவி குறிப்பிட்டுள்ளார். அதனால், இந்த வழக்கை விரைந்து முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், தற்போது நடைபெறும் காவல்துறை மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடைவிதிக்க கோரி அனுபவ் ரவி தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், விக்ரம் நாத், ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்படம்பர் 7) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அனுபவ் ரவி தரப்பில், ஒரு வழக்கில் மறுவிசாரணை என்பது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த வழக்கில் அவ்வாறு விதிமுறை ஏதும் பிப்பற்றப்படவில்லை. மேலும் இந்த வழக்கில் காவல்துறையினர் விசாரணை நடத்திக்கொண்டே சென்றால் இந்த வழக்கு ஒரு முடிவில்லாமல் போய்கொண்டே இருக்கும். எனவே, கோடநாடு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
மேலும், தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு அரசியல் காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்று உள்ளதாகவும் அனுபவ் ரவி தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் மேல்விசாரனைக்கு எந்த தடையும் விதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தற்போது உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோடநாடு எஸ்டேட்டில் அவ்வப்போது ஓய்வு எடுத்து வந்தார். பலமான பாதுகாப்பு உள்ள அந்த இடத்தில் 2017ம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சயான் உள்ளிட்ட 10 கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணை முடிந்துவிட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்படும் சயான் புதிய விசாரணையில் புதிய தகவல்களை காவல்துறையிடம் கூறியதாக தகவல் வெளியானது. மேலும், இந்த வழக்கில் புதிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இந்த வழக்கில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இணைக்கும் முயற்சி நடைபெறுவதாகக் கூறி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில்தான், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல்துறையினர் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் மேல் விசாரணைக்கு தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/kodnad-murder-and-robbery-case-not-barred-from-retrial-supreme-court-order-339642/