ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

‘கடைசி வாய்ப்பு’ 236 நோட்டீஸ்களையும் ரத்து செய்வோம் – உ.பி அரசை சாடிய சுப்ரீம் கோர்ட்

 12 2 2022 மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமலுக்கு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உ.பியில் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பல இடங்களில் ஏற்பட்ட வன்முறையில் பொது சொத்துகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இவ்விவகாத்தில் பொது சொத்துகளை சேதமடைந்தற்கான பணத்தை செலுத்தும்படி உ.பி அரசு நூற்றுக்கணக்கானோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், இவ்விவகாரத்தில் உ.பி அரசு நீதிமன்ற விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டிய நீதிபதிகள் டிஓய் சந்திரசூட் மற்றும் சூர்யா கான்ட், சட்டத்தை மீறியதற்காக இந்த நோட்டீஸ்களை ரத்து செய்வோம் என்றும் எச்சரித்தனர்.

உ.பி. கூடுதல் அட்வகேட் ஜெனரல் கரிமா பிரசாத்திடம் நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில், “நீங்களே புகார்தாரராகிவிட்டீர்கள், நீதிபதியாகிவிட்டீர்கள், பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்கிறீர்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி சந்திரசூட், ” நீதித்துறை அதிகாரியால் தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட்டுள்ள நிலையில், எப்படி கூடுதல் மாவட்ட நீதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்? என கேள்வி எழுப்பினார்.

உச்ச நீதிமன்றம் கடந்த 2009 மற்றும் 2018 ஆண்டுகளில் இரண்டு முக்கிய தீர்ப்புகளை வழங்கியது. இதுபோன்ற சம்பவங்களில் நீதித்துறை அதிகாரிகள் உரிமைகோரல் தீர்ப்பாயங்களில் நியமிக்கப்பட வேண்டும் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக நீங்கள் கூடுதல் மாவட்ட நீதிபதிகளை நியமித்துள்ளீர்கள்.

இந்த நோட்டீஸூக்கான நடவடிக்கைகளை கூடுதல் மாவட்ட நீதிபதி எவ்வாறு மேற்பார்வையிட்டனர் என்பதைக் கூற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், சட்டத்திற்கு முன் வெளியிடப்பட்ட நோட்டீஸ்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக இல்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.

மேலும் பேசிய நீதிபதிகள், “இந்த நோட்டீஸ்களை நாங்கள் ரத்து செய்வோம். பிறகு புதிய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் புதிய சட்டத்தின் கீழ் இருக்கும். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அடுத்த வெள்ளிக்கிழமை எங்களிடம் கூறுங்கள். அடுத்த விசாரணையில், இந்த விஷயத்தை முடித்துவிடுவோம். இதை பரிசீலினை செய்திட, பிப்ரவரி 18 வரை ஒரு அவகாசம் தருகிறோம்” என்றனர்.

நீதிபதி சூர்ய காந்த் கூறுகையில், “இது எங்கள் பரிந்துரை மட்டுமே. 2019 டிசம்பரில் அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு எதிராக மட்டுமே இந்த வழக்கு தொடப்பட்டுள்ளது. மொத்தம் 236 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு பேனாவால் அவற்றைத் திரும்பப் பெறலாம்.

உ.பி போன்ற பெரிய மாநிலத்தில் 236 நோட்டீஸ்களை வாபஸ் பெறுவது பெரிய விஷயம் இல்லை. எங்கள் பரிந்துரைகளைக் கேட்க முடியாது என்றால், பின்விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம். நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு செயல்பட்டு உள்ளது” என்றார்.

2020 ஜனவரியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி பர்வைஸ் அரிஃப் டிட்டு என்பவர் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதில் மனுதாரர், உச்ச நீதிமன்றத்தின் 2009 , 2018 ஆம் ஆண்டு தீர்ப்புகளை மீறுவதாக குறிப்பிட்டிருந்தார்.

source https://tamil.indianexpress.com/india/sc-pulls-up-up-warns-it-will-quash-recovery-notices-in-caa-protests-410285/