13 2 2022
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் கண்டனக் கூட்டம் 12.02.2022 ஆம் தேதி மாலை ஐந்து மணி அளவில் முகநூல் நேரலையில் மூலம் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியை சேர்ந்த கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தமிழன் பிரசன்னா, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மல்லை சத்யா ஆகியோர் பங்குகொண்டனர்.
இந்த நேரலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமை பேரா. அருணன் கூறியதாவது:
“கர்நாடக மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைக்கு தமிழகத்தில் ஏன் நாம் கண்டனம் எழுப்ப வேண்டும் என்று பலர் நினைக்கக்கூடும்.ஆனால் அதே பிரச்சனை தற்போது புதுச்சேரிக்கு வந்துவிட்டது.
தமிழகத்திலும் சங்பரிவாரம் அமைப்பை சேர்ந்த மக்கள் அதற்கு ஆதரவாக பேசுவதை நாம் மறந்துவிடக் கூடாது. மிக கொடூரமான நிகழ்வைக் கூட சாதாரணமாக நியாயப்படுத்துகிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
எந்த ஒரு மத அடையாளத்தையும் கல்வி கற்கும் இடங்களில் அனுமதிக்கக் கூடாது என்று கூறும் மக்களுக்கு நான் கேட்கும் கேள்வி இது தான். அப்போது திருநீரு, குங்குமம், நாமம், மஞ்சள் கயிறு, சீக்கிய தலப்பா ஆகியவையும் அனுமதிக்க மாடீர்களா? என்பது தான்.
இந்த விவகாரத்தை ஆரம்பித்தவர்களின் நோக்கம் என்னவென்று பார்த்தல்:
1. மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் பேணுவது
2. முஸ்லீம் மாணவர்களின் கல்வி கண்ணை பறிப்பது
3. மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி நாம் கேள்வி எழுப்பக் கூடாது, என்பது தான்.
இந்தியாவில் 80% மக்கள் இந்துக்கள் தான்; அதில் அடித்தட்டு மக்கள், சமூக ரீதியான அடித்தட்டு மக்கள், பொருளாதார ரீதியான அடித்தட்டு மக்கள் என அனைவரும் மிக மோசமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இப்படி இருப்பவர்களுக்கு என்ன உதவி செய்தார்கள் என்பது இன்றளவிலும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது” என்று தனது கண்டனக் குரலை எழுப்பினார்.
திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தமிழன் பிரசன்னா கூறியதாவது:
” 50 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக இந்த நாடு பக்குவப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, கலாச்சாரம், பண்பாடு என்கிற வீதியில் வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்த மண்ணுக்கான அடையாளமாக இருந்தது போய், இன்று வேற்றுமையில் வேற்றுமையை கொண்டுவந்து, 7 ஆண்டுகளில் மக்களின் மனதில் திணித்து இந்த நாட்டை குட்டிசுவராக்கிவிட்டார்கள்.
இந்த நாட்டில் இஸ்லாமியர்களாக, கிருஸ்துவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் தன்னுடைய உரிமைக்குரலை கேட்டு ஏந்தி பிச்சை எடுக்கக்கூடிய அவலச்சூழலுக்கு இந்த காவி பயங்கரவாத கும்பல் மாற்றியிருக்கிறது.
நான் மத வெறுப்பாளன் அல்ல; நான் கடவுள் மறுப்பாளன். ஆனால் சிறுபான்மையின மக்களுக்காக குரல் குடுக்கக்கூடிய வாய்ப்பை இந்த பேரியக்கம் எனக்கு வழங்கியிருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகம் முழுக்க CAAவுக்கு எதிராக களத்திற்கு சென்று குரல் கொடுத்தோம். இதற்கு என் மீது ஏறக்குறைய 187 FIR வழக்குகள் அதிமுக அரசால் போடப்பட்டது. அதற்கெல்லாம் அஞ்சி நான் வாழவில்லை.
கர்நாடக மாநிலத்தின் ஹிஜாப் அணிந்திருக்கின்ற பெண் பிள்ளைகளின் தொலைபேசிகளை எடுத்து, அந்த தொலைபேசியினுடைய அழைப்புகளையெல்லாம் ஆராய சொல்லி உள்துறைக்கு உத்தரவிட்டு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்று பார்க்கச்சொல்லி கட்டளையிட்டிருக்கின்றனர்.
இந்த நாடு எல்லோருக்கும் சமமான நாடு, எல்லோருக்குமான உரிமைகளை பெற்ற நாட்டில் எந்த மதத்தையும், எந்த தெய்வத்தையும் வணங்கக்கூடிய உரிமை இந்திய அரசியலமைப்பு சட்டம் குடுத்திருக்கிறது.
இத்தனை ஆண்டுகாலமாக அவர்கள் ஹிஜாப், புர்கா அணிந்து தான் இருந்தார்கள், அப்போது வராத பிரச்னை இப்போது ஏன் வரவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் புதுச்சேரியிலே வாலாட்டலாம், வேறு எங்கு வேண்டுமென்றாலும் வாலாட்டலாம், ஆனால் தமிழகத்தில் எந்த நொடியிலும் அவர்களால் வாலாட்ட முடியாது; அப்படி வாலாட்ட முயன்றால் தமிழகத்தின் முதல்வர் பெரியார் என்ற கத்தரியைக்கொண்டு அவர்களுடைய வாலை ஓட்ட நறுக்குவார்”, என்று கூறுகிறார்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது:
“எப்போதெல்லாம் இஸ்லாமியர்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவர்கள் மட்டும் தான் களத்தில் நின்று போராட வேண்டும் என்கிற எழுதப்படாத விதியை நாம் எல்லோரும் கடந்த சில காலமாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அது ஜனநாயக விரோதமாக இருந்தாலும் சரி, தனி மனித உரிமை மீறலாக இருந்தாலும் சரி, அரசியல் சாசன சட்டம் மீறலாக இருந்தாலும் சரி, பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து போராடுவது என்பது பெருபான்மை மக்களுக்கு விரோதமான போராட்டமாக சித்தரிக்கப்பட்டது.
தற்போது நடக்கும் விவகாரங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது உத்தர பிரதேசத்தில் நடக்க விருக்கும் தேர்தல் என்று தான் என்ன தோன்றுகிறது. பாஜக ஆளுகின்ற கர்நாடகாவில் ஹிஜாபை தடை செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தற்போது புதுச்சேரியிலும் ஆரம்பித்துள்ளனர். இப்படியே போனால் மதவாதம் மேற்கொள்கின்ற பாசிச அரசாக மாறிவிடுமோ என்கிற அச்சத்தை கொடுக்கிறது.
நம் மாநிலம் தான் தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற பல சமூக சிந்தனையாளர்களால், பல சமூக நீதி போராளிகளால், பல ஒடுக்கப்பட்ட மக்களை தூக்கி நிறுத்தவேண்டும் என்று தனது வாழ்க்கை முழுவதும் அர்பணித்துக்கொண்ட மாபெரும் தலைவர்களால் உரம் போட்டு வளர்க்கப்பட்ட இந்த மண்ணை மதவாத அரசியலில் புகுத்தி புழுத்து போகச் செய்வதற்காக வருகின்ற இந்த கூட்டம், இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்”
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த கே.எஸ்.அழகிரி கூறியதாவது:
“சங்பரிவாரம் போன்ற அமைப்புகளுக்கு மதம் என்ற ஆயுதத்தை தவிர வேற எதுவும் இல்லை. ரூ பொருளாதார கொள்கையை சொல்லி, சமூக பிரச்சனைகளை சொல்லி, ஏழ்மையை அகற்றுவதை சொல்லி, உலகநாடுகளுடைய பிரச்சனைகளை சொல்லி, வெளி விவகார பிரச்சனைகளை பற்றி சொல்லி, அவர்களால் மக்களை கவர முடியாது. மாறாக அவர்களால் முடிந்தது ஒன்றே ஒன்று தான், மத பிரிவை கூறி மக்களின் மத்தியில் கலவரத்தை கொண்டுவருவது மட்டும் தான்.
மகாத்மா காந்தி சொன்னது போல மதம் என்பது ஒரு தனி மனிதனின் நம்பிக்கையாக மட்டும் தான் இருக்க வேண்டும், அது ஒரு அரசாங்கத்திற்கு இருக்க கூடாது.
இன்னொரு சமூகத்தை எதிர்ப்பவர்கள், இன்னொரு சமூகத்தை மறுப்பவர்கள், இன்னொரு சமூகத்தை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று சொல்லுபவர்கள் ஒரு பொழுதும் நல்லவர்களாக இருக்க முடியாது. எனவே, நமது பரப்புரையை கடுமையாக செய்தல் வேண்டும்.” என்று கூறுகிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது:
“இடது சாரி முதலிய முற்போக்கு சக்திகளை நெருக்கடிக்கு உள்ளாக்குவது என்கிற அடிப்படையில் பாரதிய ஜனதா என்ற சங்பரிவாரம் அமைப்புகள் காய்களை நகர்த்தி வருகிறார்கள். இதுபோன்ற சிக்கல்கள், எழும்போதெல்லாம் நாம் அதை கண்டித்தால், “”பார்த்தீர்களா? இவர்கள் அனைவரும் இந்துக்களுக்கு எதிரிகள், இவர்கள் முஸ்லீம்களை ஆதரிக்கிறார்கள், கிருஸ்துவர்களை ஆதரிக்கிறார்கள்”” என்று கூறுகிறார்கள்.
தற்போது, உத்திர பிரதேசத்தின் தேர்தலுக்கு வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில், கர்நாடகாவில் அவர்களின் ஆட்சி இருக்கின்ற காரணத்தினால் ஒரு நெருப்பை பற்றவைக்கிறார்கள். தேசிய அளவிலான ஒரு உரையாடலை அவர்கள் கொண்டுவர செய்கிறார்கள். அதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. உத்திர பிரதேச தேர்தலில் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில்தான் இதை செய்கிறார்கள்.
நாடாளுமன்ற மக்களவையில் கூறியிருந்தேன், “”அது ஒரு பள்ளி நிறுவாகத்தின் நிலைப்பாடாக நாங்கள் கருதவில்லை, அல்லது கர்நாடக மாநில அரசின் நிலைப்பாடாக கருதவில்லை, இது இந்திய ஒன்றிய அரசின் நிலைப்பாடுதான் ஆகவே இதற்கு பொறுப்பு ஒன்றிய அரசு தான்”‘ என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.
RSS போன்ற சங்பரிவார் அமைப்புகளை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நான் முன்வைத்தேன்.
இந்திய முழுவதும் அவ்வப்போது மாநிலங்களுக்கான தேர்தல் நடந்தாலும் அல்லது தேசிய அளவிலான நாடாளுமன்ற தேர்தல் நடந்தாலும் மதம் சார்ந்த பிரச்சனைகளை திட்டமிட்டு அவர்கள் உருவாக்குகிறார்கள். இவையெல்லாம் அவர்களின் நீண்டகால செயல்திட்டங்களில் ஒன்று.
இந்து பெரும்பான்மைவாதத்தை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அவர்களின் செயல்திட்டம். ஆகையால் வெளிப்படையாகவே சிறுபான்மை சமூகத்தினர் மீதான வெறுப்பை திட்டமிட்டு திணிக்கிறார்கள். முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை, கிருஸ்துவர்களின் வாக்குகள் தேவையில்லை என்பதை வெளிப்படையான முடிவாக எடுத்துக்கொண்டு இவர்கள் செயல்படுவது இந்துக்களை பெரும்பான்மை என்கிற அடிப்படையில் ஒருங்கிணைத்துவிட முடியும் என்ற நோக்கத்தில் தான்.
ஆகவே இந்து பெரும்பான்மையை பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தி கைப்பற்றிவிட்டதால், அந்த மக்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் இது போன்ற யுக்தியை கையாளும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனை புரிந்துகொண்டால் தான் அவர்களை நாம் அம்பலப்படுத்தமுடியும்.” என்று கூறுகிறார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/condemnation-meeting-about-hijab-issue/