திங்கள், 14 பிப்ரவரி, 2022

மு.க ஸ்டாலினை போனில் தொடர்பு கொண்ட மம்தா: விரைவில் எதிர்க்கட்சி முதல்வர்கள் கூட்டம்

 13 2 2022 

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரித்திருந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு பேசியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அரசிலமைப்பு சட்டத்தின் 174வது பிரிவு மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவையை பிப்ரவரி 12ம் தேதி முதல் முடக்கி வைக்க உத்தரவிட்டார். இதனால், மேற்கு வங்க மாநில அரசியலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் உடன் ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநரை ட்விட்டரில் பிளாக் செய்தார்.

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் அம்மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரை முடக்கியதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரித்தார்.

மேற்கு வங்காள ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தொடரை முடக்கி வைத்த செயல், உயர்ந்த பதவியில் இருந்து எதிர்பார்க்கப்படும் எந்த உரிமையும் இல்லாமல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.

அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் அடையாளர் ரீதியான தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது.” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததையடுத்து, மம்தா பானர்ஜி தொலைபேசியில் ஸ்டாலினை தொடர்புகொண்டு பேசியுள்ளார். மேலும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களின் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகையில், “அன்புக்குரிய சகோதரி மமதா பானர்ஜி என்னைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், ஆளுநர்களின் அரசியலமைப்பை மீறிய நடவடிக்கைகளைப் பற்றியும்; அவர்கள் அதிகாரத்தை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் போக்கைப் பற்றியும் தனது கவலையையும் ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்டார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் ஒன்றுகூடிச் சந்திக்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார். மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடிப்பதில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள்ள உறுதிப்பாட்டினை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன். எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் சந்திப்புக் கூட்டம் விரைவில் நடைபெறும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/mamata-banerjee-talks-with-mk-stalin-about-soon-non-bjp-cm-meetings-and-governor-activities-411032/