வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

பெட்ரோல் குண்டு வீச்சு… கைதான நபரின் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை தி.நகரில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, அதிகாலை 1.20 மணியளவில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் , பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை கொளுத்தி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த தாக்குதலில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர். மேலும், அங்கிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அதிலிருக்கும் நபர் பழைய குற்றவாளி வினோத் என்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர்.

இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்கிய காவல் துறையினர், வினோத்(38) மற்றும் அவரது பெற்றோர் மணி- மாரியம்மாள் ஆகியோரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வினோத் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பாஜகவின் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு ஆத்திரத்தில் பாஜக தலைமை அலுவலகம் மீது 3 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது தெரியவந்தது, அவர் மத ரீதியாகவே, அரசியல் சம்மந்தமாகவோ குற்ற செயலில் ஈடுபடவில்லை என்றும், பொது பிரச்சினைக்காக இப்படி குடித்துவிட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.

வினோத் மீது ஏற்கனவே 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 10 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 2017ஆண் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலைய வாசலில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியுள்ளதாகவும், அச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

வினோத்திடம் காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/petrol-bombs-hurled-at-bjp-headquarters-in-chennai-409482/

Related Posts: