செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

மிசாவையே பார்த்த ஸ்டாலினை மிரட்டுகிறீர்களா? – முதல்வர் கேள்வி

 14 2 2022 ரோம் நகராக மாற்றப்போகிறோம் என்று மதுரையை சீரழிச்சது தான் மிச்சம் என அதிமுகவை கடுமையாக விமர்த்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஓவ்வொரு மாவட்ட திமுக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் இன்று மதுரையில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பரப்புரை மேற்கொண்டார். 

அதில் பேசிய அவர், மதுரைக்கு பல்வேறு திட்டங்களை உருவாக்கி கொடுத்தது திமுக ஆட்சி. தென் தமிழகத்திற்கு தலைநகரம் போல இருக்கிறது மதுரை. திமுக வரலாற்றில் மதுரையும், மதுரை வரலாற்றில் திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்தவை. தமிழ்நாட்டின் தென்மாவட்ட இளைஞர்களின் அறிவின் ஆலயமாக மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலகம் அமையும். மதுரை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் மதுரையை லண்டனாக்க போகிறோம், சிங்கப்பூர் ஆக்கப்போகிறோம் என அன்றைய அமைச்சர்கள் தினமும் பேட்டி கொடுத்தார்கள்; ஆனால், மதுரையை அவர்கள் சீரழிச்சதுதான் மிச்சம். திமுக ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைகள்தான் இருக்கு என புது ஜோசியம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். அரசியல் அமாவாசைகள் யாரென தெரிந்துதான் அவர்களை புலம்ப வைத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். மதுரையை ரோம் நகரைப் போல மாத்துகிறோம், அப்படி மாத்துகிறோம் என சொன்னார்கள். யார் சொன்னது? பெரிய விஞ்ஞானி செல்லூர் ராஜு சொன்னாரு. செய்தாரா? ‘பரமார்த்த குருவும் அவரது சீடர்களும்’ என்ற கதையைப்போல தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது. 

அதிமுக ஆட்சியின்போது மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏராளமான ஊழல்கள் நடைபெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் தலைமை செயலகத்திலேயே வருமான வரி சோதனை நடந்தது. மாநில உரிமைகளை டெல்லிக்கு அடகு வைத்தது அதிமுக அரசு. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்கள் மீது அதிமுக அரசு தடியடி நடத்தியது.

மதுரைக்கு அறிவித்த மோனோ ரயில் திட்டம் எங்கே? தொழில் வளர்ச்சியை முடக்கியதும், முதலீடுகளை லஞ்சம் கேட்டு துரத்தியதும், சேதுசமுத்திர திட்டத்தை முடக்கியதும் அதிமுக ஆட்சி தான். யாரை மிரட்டுகிறீர்கள் பழனிசாமி? மிசாவையே பார்த்த ஸ்டாலினை மிரட்டுகிறீர்களா? 2024ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என பழனிசாமி ஆருடம் சொல்கிறார். இவர்களுடைய ஞான திருஷ்டிக்கு மட்டும்தான் இதெல்லாம் தெரிகிறது போல. கற்பனையில் கோட்டை கட்டிக் கொண்டு, பாஜகவிற்கு டப்பிங் பேசுகிறார் பழனிசாமி. பழனிசாமியின் பொறுப்பற்ற – ஆணவப் பேச்சுக்களுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம். நான் சொன்னா அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.